வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (20/04/2018)

கடைசி தொடர்பு:16:40 (20/04/2018)

நிர்மலா தேவியின் வழக்கறிஞர் திடீர் விலகல் 

நிர்மலா தேவி

சிறையில் பேராசிரியை நிர்மலா தேவியைச் சந்தித்து பேசிய வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். . 

 அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை நகர போலீஸ் நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலா தேவியை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், சந்தித்துப் பேசினார். அப்போது. தன்னுடைய உயிருக்கு ஆபத்துள்ளதாக நிர்மலா தேவி கூறியதாகப் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிலையில் நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். தொடர்ந்து, நிர்மலா தேவியிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரின் அறைகளில் 5 டீம் கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி-யும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவும் நிர்மலா தேவியின் வழக்கில் அசுர வேகத்தை எடுத்துள்ளன. இந்தச் சமயத்தில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கிலிருந்து விலகுவதாகத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, ``என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் இந்த வழக்கிலிருந்து விலகுகிறேன். இந்த முடிவுக்கு யாருடைய நிர்ப்பந்தமும் கிடையாது’’ என்றார்.