`பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம்!’ - நீலகிரி சமூக ஆர்வலர்கள் வேதனை

தொரப்பள்ளி வனத்துறைச் சோதனைச் சாவடி அருகே, சுற்றுலாப் பயணிகளால் குவியும் பிளாஸ்ட்டிக் கழிவுகள் வன விலங்குகளுக்கு ஆபத்து.

நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளால் விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

பிளாஸ்டிக் கழிவுகள்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் செயல்படும் பலசரக்கு கடை, பேக்கரி, ஹோட்டல், பெட்டிக்கடை என அனைத்து வித கடைகளிலும் பிளாஸ்ட்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், பெரும் நிறுவனங்களின் தயாரிப்புக்களான தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனி உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்களில்தான் விற்பனை செய்யப்படுகிறது. நாடுமுழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுக்குத் தடை விதிக்க முடியாவிட்டாலும், நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் இவற்றின் பயன்பாட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களில் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகளுக்கு, இரவு நேரத்தில் எந்த அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது என்பதற்காக இரவு 9.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியை, வாகனங்கள் கடந்து செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. வாகனங்கள் தடை செய்யப்படும் நேரத்தில் அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பேப்பர் பிளேட், தண்ணீர் பாட்டில், உணவுப் பொட்டலங்கள் என பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை ரோட்டோரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இதனால், வனத்துறைச் சோதனைச் சாவடி அருகே உள்ள குப்பைத்தொட்டி, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதில் தேங்கும் உணவை ருசிக்க அப்பகுதியில் உள்ள குரங்குகள் குப்பைத் தொட்டியைச் சுற்றி குவிகின்றன. இதேபோல சில சமயங்களில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைத்தொட்டியில் உணவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என வன விலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, இரவு நேரத்தில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று, உணவுக்காகத் தொரப்பள்ளியில் உள்ள குப்பைத்தொட்டியைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீலகிரி மாவட்டக் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “எல்லா சோதனைச் சாவடிகளிலும் ஆண்டி பிளாஸ்டிக் பணியாளர்கள்’ நியமிக்கப்பட்டுள்ளனர், அது மட்டுமல்லாது அனைத்து டோல் செக்போஸ்ட்களிலும் பிளாஸ்ட்டிக் பைகள் உள்ளிட்டவை இருக்கின்றனவா எனச் சோதனை செய்யப்படுகிறது. ஆனால், சில வாகன ஓட்டுநர்கள் டோல் கட்டணத்தையும் செலுத்தாமல், ‘ஆண்டி பிளாஸ்டிக்’ சோதனைக்கும் வாகனங்களை நிறுத்தாமல் சென்றுவிடுவதாகப் புகார் எழுந்துள்ளது. நிறுத்தாமல் வரும் வாகனங்களின் பதிவு எண்களைக் கொண்டு வாகன உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று பணி நிமித்தமாகக் கூடலூர் பகுதிக்கு செல்ல இருக்கிறேன், தொரப்பள்ளி சோதனைச் சாவடி அருகில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவது தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்வேன்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!