`இந்த 2 வீரர்கள்தான் எனக்குப் போட்டி'- ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என சதீஷ் சிவலிங்கம் உறுதி!

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தினார். 

சதீஷ்குமார் சிவலிங்கம்

பளுத்தூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் 144 கிலோ (Snatch), க்ளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 173 கிலோ என மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கத்தைத் தட்டி வந்தார். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் வெல்லும் இரண்டாவது தங்கம் இது. நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய சதீஷ்குமாருக்குச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான வேலூர் சத்துவாச்சாரிக்கு வந்தவருக்கு ஆர்த்தி எடுத்து பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர் சத்துவாச்சாரி மக்கள்.

அதனை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் சார்பில் கலெக்டர் ராமன் வரவேற்பு அளித்தார். வேலூர் கோட்டையிலிருந்து நேதாஜி விளையாட்டு மைதானம் வரை, விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பேரணியாக சதீஷ்குமாரை அழைத்துவந்தனர்.  வழியெங்கும் சதீஷ்குமாரைப் பொதுமக்கள் கைகுலுக்கி ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில், எஸ்.பி.பகலவன் ஆகியோர் பங்கேற்று பாராட்டு தெரிவித்து பாராட்டு விழா கோப்பை வழங்கினர்.

சதீஷ்குமார் சிவலிங்கம்

அதன் பின்பு பேசிய சதீஷ்குமார், `நான் வென்ற இந்தப் பதக்கத்தை நாட்டுக்கும் எனது மாவட்டமான வேலூருக்கும் சமர்பிக்கிறேன். மாணவர்கள் விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி பல சாதனைகள் படைக்கவேண்டும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் ஒரே லட்சியம். ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் அதற்கான பயிற்சியைச் செய்துகொண்டு வருகிறேன். வரவிருக்கும் ஒலிம்பிக்கில் சைனா போன்ற 2 நாட்டு வீரர்கள் எனக்குப் போட்டியாக உள்ளனர். அவர்களை வீழ்த்தி தங்கம் வெல்வேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!