10 ஆண்டில் 973 யானைகள் உயிரிழப்பு... RTI தந்த அதிர்ச்சி... விழித்துக்கொள்ளுமா வனத்துறை?

வருடத்துக்கு 98 யானைகள் இறக்கும் விஷயத்தில் வனத்துறை அக்கறை காட்டாமல் இருந்தால், யானைகளை மியூசியத்தில் மட்டும் காணக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை.

10 ஆண்டில் 973  யானைகள் உயிரிழப்பு... RTI தந்த அதிர்ச்சி... விழித்துக்கொள்ளுமா வனத்துறை?

டந்த ஆண்டு யானைகள் அதிக அளவில் இறப்பினைச் சந்தித்தது. அதுவும் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் யானைகள் அதிக அளவில் சாலையில் அடிபட்டும், பட்டினி காரணமாகவும் இறப்பைச் சந்தித்து வந்தன. அதனால் தமிழ்நாட்டில் யானைகள் குறித்த விவரங்களைப் பெற வனத்துறைக்கு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பித்திருந்தோம். ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்த ஆர்.டி.ஐ-க்கு இம்மாதம்தான் பதில் கிடைத்தது. அவ்வளவு வேகமாகத் தகவல் ஆணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க, வனத்துறையிடமிருந்து வந்த பதிலை அலசினோம். 

வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகள்

அதில் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடைசியாக 2017-ம் ஆண்டு மே மாதம் யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மொத்தமாக 2761 யானைகள் வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருக்கின்றன. பொதுவாக யானைகள் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன எனத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன.

ஆனால் 2012-ம் ஆண்டு எடுத்த யானைகள் கணக்கெடுப்பின்படி 29,391 யானைகள் இருந்திருக்கின்றன. அதில் தென்னிந்தியாவில்தான் அதிகமாக யானைகள் இருக்கின்றன. ஆனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் காடுகளும், பெருகி வரும் வறட்சியும்தான். இதுதவிர யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதும் முக்கியமான காரணம். விலங்குகளில் மிக முக்கியமான இடம் யானைக்கு உண்டு. ஆனால், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற கணக்கு விகிதத்தில் மட்டுமே யானைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதுதான் சோகமான விஷயம். 

ரயில் மோதி உயிரிழப்பு

கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன. தானாக இறக்கும் யானைகள் தவிர தந்தம், முடி எனப் பலவற்றுக்காகவும் மனிதர்களால் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற செய்தி தினசரி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், நன்றாக யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். யானை எப்போதும் தனது முன்னோர்கள் நடந்த பாதையில் மட்டுமே பயணிக்கும் தன்மை கொண்டது. அது எப்படி ஊருக்குள் வரும். யானைகளின் பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழக்கமாக தமிழ்நாட்டில் யானைகளுக்காக வருடம் தோறும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. அவற்றுக்குக் காட்டும் அக்கறையைக் காட்டு யானைகளைக் காப்பதில் வனத்துறை காட்டவில்லை. அதற்கான காரணிகளையும் ஆராய வனத்துறை தயாராக இல்லை. 

``கேரளா மற்றும் கர்நாடகாவில் வனப்பகுதிகளில் ரிசார்ட்டுகள் தொடங்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் அதிகமான ரிசார்ட்டுகள் இன்று முளைத்துக்கிடக்கின்றன. தியான மையம், கல்லூரிகள் போன்ற கட்டடங்களும் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறை இதுபற்றி நடவடிக்கை எடுக்காததுதான் வருத்தமளிக்கிறது" எனக் குற்றம் சாட்டுகிறார்கள், சூழலியலாளர்கள். வருடத்துக்கு 97 யானைகள் வீதம் இறக்கும் நிலை நீடிக்குமானால் கூகுளில் மட்டுமே காணக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!