வாரத்தில் மூன்று நாள்கள் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து! | Tirupati devasthanam cancels VIP darshan in 3 days of week

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (20/04/2018)

கடைசி தொடர்பு:21:20 (20/04/2018)

வாரத்தில் மூன்று நாள்கள் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!

கோடைக்காலம் வந்துவிட்டது. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டுவிட்டார்கள்; அல்லது விடப்போகிறார்கள். சாதாரண விடுமுறை நாள்களிலேயே திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இப்போது நீண்ட விடுமுறை என்பதால் தினமும் மக்கள் வெள்ளம் திருப்பதியை மூச்சு முட்டச் செய்துவிடும். இதனால் சாதாரண மக்கள் எளிதாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக வரும் ஜூன் 16ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வி.ஐ.பி - க்களின் சிறப்பு தரிசனம் ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் கூட்டத்தின் அளவினைப் பொறுத்து கூடுதல் பணியாளர்களை நியமித்து தூய்மை, பராமரிப்பு, உணவு தயாரிப்பு, விநியோகம் போன்ற திருப்பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி

மேலும் கூடுதலாக பிரசாத லட்டுகள் தயாரிக்கப்படும். தினமும் 3½ லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரத்துக்கு 1 1/2 லட்சம் பக்தர்கள் 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனத்தில் பெருமாளை தரிசித்து வருகிறார்கள். தற்போது இந்த அளவை அதிகரிக்க முடியாது என்பதால் சிறப்பு கட்டண பக்தர்களும் இலவச தரிசன முறையில் வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். நாள் முழுவதும் சிற்றுண்டி, உணவு, பால், டீ, காபி போன்றவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.