`கடல் சீற்றம் எச்சரிக்கை எதிரொலி’ - தனுஷ்கோடி அக்னிதீர்த்த கடலில் நீராட கட்டுப்பாடு!

 கடல்சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையினை தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 கடல்சார் தகவல் மையத்தின் எச்சரிக்கையினை தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தனுஷ்கோடி மற்றும் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்

நாளை காலை 8.30 மணி முதல் நாளை மறுநாள் இரவு 11.30 மணி வரை கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் படி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை கடலோரப் பகுதிகளில் 18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் கடல் அலைகள் 8.25 அடி முதல் 11.50 அடி வரையிலான உயரத்திற்கு எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் பேரிடர் மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் நடராஜன், ``இந்தியக் கடல்சார் தகவல் மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காணப்படும் அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடப்படுகிறது. மேலும், அரியமான் கடற்கரைப் பகுதியில் நீர் விளையாட்டில் ஈடுபடுவதையும் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடல் சீற்றத்தின் தாக்கம் அதிகமாகக் கரையோரப் பகுதிகளில் உணரப்படும் என்பதால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் படகுகளில் செல்ல வேண்டாம் எனவும், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதை தவிர்க்கும் வகையில் போதிய இடைவெளியில் படகுகளை நிறுத்துமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ, வேடிக்கை பார்ப்பதற்காகவோ கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் கடல்சீற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக `1077’ என்ற அவசரகால இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!