வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (20/04/2018)

கடைசி தொடர்பு:15:41 (27/06/2018)

காஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 காஷ்மீர் சிறுமிக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி குதிரை மேய்க்கச் சென்ற போது காணாமல் போனார். இந்நிலையில் 7 நாள்களுக்கு பின் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து கோயில் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேரைக் காஷ்மீர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கொடுக்க வலியுறுத்தியும், காஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்தநிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் தலைமையில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டும், கொலையாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் சாகுல், செய்யது அன்வர்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா கண்டன உரையாற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.