பீரியட்ஸ் டைம்ல வேலை பார்த்தப்பக்கூட இவ்ளோ வலிக்கலை எஸ்.வி.சேகர்! குமுறும் பெண் நிருபர்கள்

 

``திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்கும் டாணாதான் என்னோட சொந்த ஊரு. சாயந்தரம் 6 மணிக்கு மேலே வீட்டைவிட்டு வெளியில் போனாலோ, பக்கத்து வீட்டு ஆண்களோடு பைக்ல போனாலோ அவ்வளவுதான். கண்ணு, காது, மூக்கு வெச்சுப் பேச ஆரம்பிச்சுடுவாங்க. `இந்தா பாருடி, இந்தப் புள்ள இப்புடி ராத்திரி நேரத்துல வாரதும் போறதுமா இருக்கா. இது நல்லாவா இருக்கு'னு காதுபடவே வசவு விழும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாமும் மீடியாவுல வேலை பார்க்கணும்னு துணிஞ்சு வெளியில் வந்தேன். ஆனால், இப்படியான கீழ்த்தரமான பதிவுகளைப் பார்க்கும்போது ஆத்திரமா வருது” - எஸ்.வி.சேகரின் பதிவு, தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் பெரும் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறது. அந்த ஆக்ரோஷ அதிர்வலையில் ஒருவர்தான், நிருபர் ரேவதி.

``நான் மீடியா வேலைக்கு வந்து மூணு வருஷம் ஆகுது. ஆரம்பத்தில், இந்த வேலைக்கு வீட்டுல எல்லாருமே தடை போட்டாங்க. `பொம்பளப் புள்ளை 7 மணிக்கு மேலே வெளியில போறது தப்பு. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது'னு நிறைய அட்வைஸ். நான் பிடிவாதமா நின்னு இந்த வேலையில் சேர்ந்தேன். எனக்கும் ஆரம்பத்தில் ஆண்களிடம் கொஞ்சம் பயம் இருந்துச்சு. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என மூணு மாவட்டத்துக்கும் நான் ஒருத்திதான் பெண் நிருபர். செய்தி சேகரிக்க போகும் இடங்களில் ஆண்களாக இருப்பாங்க. நான் கொஞ்சம் தயங்கினாலும், `வாம்மா தங்கச்சி. நீ முன்ன நில்லும்மா. நாங்க பாத்துக்குறோம்'னு நண்பர்களாக ஊக்கப்படுத்துவாங்க. இதுவரை ஒருத்தர்கூட ஒதுக்கினதில்லே. தப்பா பேசினதில்லே. திங்கள் கிழமை கலெக்டர் ஆபீஸ்ல மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும். பீரியட்ஸ் டைமிலும் அந்தக் கூட்டத்துக்கு கண்டிப்பா போய்தான் ஆகணும். தலை சுத்தும், நிற்கவே முடியாது. அந்த வலியைப் பொறுத்துக்கிட்டு வேலை பார்த்திருக்கேன். ஆனால், பல்கலைக்கழகங்களைவிடப் பெரிய அளவில் செக்ஸ் அப்யூஸ் நடப்பது மீடியாவில் என எழுதியிருக்கிறார். இப்படியெல்லாம் எப்படிக் கூச்சமே இல்லாம பேச முடியுது. இவர் மாதிரி ஆளுங்க நாட்டுக்கே சாபக்கேடு” என்று கொதிக்கிறார் ரேவதி.

பவித்ரா உதவி ஆசிரியர்கோவை மாவட்ட தினசரி நாளிதழில் உதவி ஆசிரியராக இருக்கும் பவித்ரா, ``எஸ்.வி.சேகர் இப்படியொரு தரம் தாழ்ந்த கருத்தின்மூலம் தன்னைத் தானே கீழ்மைப்படுத்திக்கிட்டார். சமூகத்தில் ஒரு முக்கியமான பதவியில் இருப்பவர், இதுபோன்ற கருத்துகளை முன்பின் யோசிக்காமல் பதிவிடுவதை எப்படி மேலோட்டமாக எடுத்துக்க முடியும்? `எஸ்.வி.சேகரின் கருத்து தனிப்பட்டது. அதை பா.ஜ.கவுடன் தொடர்புப்படுத்த முடியாது' என அந்தக் கட்சிக்காரங்க கொடி பிடிக்கிறாங்க. எஸ்.வி.சேகரைக் கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்கினால் அதை நம்பலாம். அதைச் செய்யலையே. நானும் ஃபீல்டு ரிப்போர்ட்டராக இருந்துதான் சப் எடிட்டராகி இருக்கேன். மற்ற பணிகளைப்போல அல்ல மீடியா. இரவு, பகல் பாராது, பண்டிகை விடுமுறை இல்லாது, ஓடி ஓடி தங்களின் உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே முன்னேறியிருக்காங்க. அதேபோல, மீடியாவைத் தவிர இன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைத் தொட்டு, விமானப் பணி வரை 70 சதவிகிதம் பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. அங்கெல்லாம் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது. துன்புறுத்தல்கள் இருக்கவே செய்யுது. ஆனால், அதை எந்தவொரு பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெண்களைப் பற்றிய இவரின் புரிதலும் கருத்தும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத அவரின் தரம் தாழ்ந்த எண்ணத்தைத்தான் வெளிப்படுத்துகிறது” என்கிறார் ஆதங்கத்துடன்.

ஊடகவியலாளர் ஆர்.வி.சரண்யா``தமிழகத்தில் பி.ஜே.பி. கட்சிக்கு எந்த ஒரு மதிப்புமே கிடையாது. அதனால், அந்தக் கட்சியில் இருக்கிறவங்க தங்கள் இருப்பை காண்பிச்சுக்க இதுமாதிரி மட்டமான கருத்துகளைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தறாங்க. இப்படியான கீழ்த்தரமான ஸ்டேட்டஸ்களைத் தாண்டி யோசிக்கிறதே கிடையாது. நீ ஒரு மட்டமான ஸ்டேட்டஸ் போட்டுட்டியா, இதோ நானும் ஒண்ணு தட்டிவிடறேன் பாருனு போட்டி போட்டு தரைமட்டத்தில் விழறாங்க. இரண்டு மணி நேரம் இதுமாதிரியான கருத்துகளால் தங்கள் இருப்பைக் காட்டிவிட்டு அது பூர்த்தியானதும், `இது என் நண்பன் போட்ட கருத்து, அட்மின் போட்ட கருத்து' எனக் கூசாமல் பொய் பேசறாங்க. இதை ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கணும். வேலைக்காக ஒவ்வொருவரும் தங்களுடைய புரொஃபைலை தூக்கிட்டு அலைஞ்சு திரியறதும், அப்போ போன் வருமா இப்போ போன் வருமா எனக் காத்துட்டிருக்கிறதும், வேற ஒரு சொசைட்டியில் இருக்கும் அவருக்கு எப்படி தெரியப்போகுது. இந்தக் கருத்தை 90 பேர் எதிர்த்தாலும் 10 பேராவது ஒருவேளை இது உண்மையா இருக்குமோ என நினைச்சாலே அது எவ்வளவு பெரிய விபரீதத்தை கொடுக்கும். உண்மையிலேயே உழைத்து மேலே வர நினைக்கும் ஒவ்வொருவரையும் எஸ்.வி.சேகர் அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவருடைய இந்தக் கருத்து உச்சபட்சமான கேவலம்” எனக் கோபத்தில் வெடிக்கும், சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆர்.வி. சரண்யா, எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அவரின் குடும்ப உறுப்பினர்களை கேலி செய்வதும் வீட்டை முற்றுகையிடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!