`கொள்ளிடத்தைக் காப்பாற்றுங்கள்; எங்கள் சந்ததியே அழிந்துவிடும்' - கொந்தளிக்கும் மக்கள்!

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 

கொள்ளிடம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியப் பகுதியில் திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டியவாறு கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. கொள்ளிடம் ஆற்றில் ஓடும் தண்ணீரால் இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால், விவசாயம் செழித்துக் காணப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால், இப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் போர்வெல்கள் அமைத்து கோடையிலும் விவசாயம் செய்துவருகின்றனர். இதற்கிடையே கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள், கிராமங்களுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்து விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

\

போதாக்குறைக்குத் தற்போது திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இக்குவாரிக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் கடந்த ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருமானூர் பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அனைத்துக் கட்சியினர், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தஞ்சாவூர் சாலையில் உள்ள கொள்ளிடம் பாலத்திலிருந்து கடைவீதி வரை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  ``கொள்ளிடத்தைக் காப்பாற்றுங்கள்; இல்லையேல் எங்கள் சந்ததியே அழிந்துவிடும்'' என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!