`அவதூறு கருத்து' - எஸ்.வி.சேகர் மீது நெல்லை பத்திரிகையாளர் மன்றம் வழக்கு! | case filed against s.v,sekar by nellai press club for abusing comments on journos

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (20/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (20/04/2018)

`அவதூறு கருத்து' - எஸ்.வி.சேகர் மீது நெல்லை பத்திரிகையாளர் மன்றம் வழக்கு!

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும் அருவருக்கத் தகுந்த வகையிலும் கருத்துத் தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும் அருவருக்கத் தகுந்த வகையிலும் கருத்துத் தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகர் மீது வழக்கு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அந்தப் பெண் செய்தியாளர், `பல முறை கன்னத்தைக் கழுவியும் அந்தச் சம்பவம் எனக்கு அருவருப்பை ஏற்படுத்தி விட்டது’ எனக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மன்னிப்புக் கோரினார்.

இந்த நிலையில், இதுபற்றி முகநூலில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை நடிகரும் பா.ஜ-வின் சார்பாக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருபவருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்தார். அவரது இந்தப் பதிவு தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர்களைக் கொதிப்படையச் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மன்றத்தின் தலைவர் அய்கோ என்கிற அய்.கோபால்சாமி சார்பாக வழக்கறிஞர்களான டி.ஏ.பிரபாகர், வினோத் தாசன் ஆகியோர் குற்றவியல் நீதித்துறை நடுவர் 1-வது நீதிமன்ற நீதிபதி பிஷ்மிதா முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், ``திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. இதில் முன்னணி நிறுவனங்களின் செய்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அய்.கோபால்சாமி என்னும் நான் தலைவராக இருக்கிறேன். முகநூலில் எஸ்.வி.சேகர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவு பத்திரிகையாளராகிய என் மீதும் என்னைப் போன்றவர்களின் மீதும் அவதூறையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதைப் படித்துப் பார்த்த எனது நண்பர் சக்திவேல் என்பவர், `பத்திரிகை என்றாலே இப்படித்தான் கேவலமாக இருப்பீர்களோ?’ எனக் கேவலமாகப் பேசிவிட்டார். எதிர்மனுதாரரான எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவால், சமூகத்தில் என்னைப் போன்றோரின் மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. 

இந்த அவதூறு பதிவை வேண்டுமென்றே வெளியிட்டு எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திய எதிர்மனுதாரர், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 499-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர். எனவே நீதிமன்றம், எதிர்மனுதாரரை அழைத்து விசாரித்து இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 500-ன் கீழ் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.