வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (21/04/2018)

கடைசி தொடர்பு:00:30 (21/04/2018)

`காஷ்மீர் சிறுமி கொலைக் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை’ - போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயதுச் சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில், ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம்

 தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, `காஷ்மீர் சிறுமி மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்' எனக் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர், மைதீன் சேட்கான், ''இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மதச்சார்பற்ற நாடு. ஆனால், மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையின மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். மதத்தின் பெயராலும், இனத்தில் பெயராலும், மாட்டுக்காகவும் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். காஷ்மீர் சிறுமி கோயிலின் கருவறைக்குள் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறாள். சிறுமியைக் கொலை செய்தவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும். 

காட்டில் சாதாரணமாக ஒரு யானை இறந்தால் கூட உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து அதனை தனி வழக்காக எடுத்து விசாரணை செய்கிறது. காஷ்மீர் சிறுமியின் மரணம் நம் நாட்டிற்கு விடப்பட்ட சவால். எனவே, உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, தானாக முன் வந்து சிறுமியின் கொலை வழக்கினை எடுத்து விசாரணை செய்து நீதி வழங்கிட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க