வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (21/04/2018)

கடைசி தொடர்பு:09:13 (21/04/2018)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி மின்வாரிய என்ஜினீயர்ஸ் யூனியன் ஆர்ப்பாட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், நச்சுப்புகையை வெளியிடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி, தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய என்ஜினீயர்ஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்வாரிய என்ஜினீயர்ஸ் யூனியனின் மாநிலத் தலைவர் மனோகரன், " உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நீர்த்துப்போகும் வகையிலும், தமிழக மக்களின் உரிமைக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவருகிறது மத்திய அரசு. காவிரியில் தமிழக உரிமையைக் காத்திட, மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்திக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். இனியும் கால தாமதம் கூடாது. 

அதேபோல, தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராடிவருவது, ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வேண்டும் என்பதுதான். இந்த ஆலையிலி  ருந்து கழிவாக வெளியேறும் பாஸ்பாரிக் மற்றும் சல்பியூரிக் அமில நச்சுப் புகையினால், சுற்றுச்சூழல் கடுமையாகப்   பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீரும் மண்ணும் நஞ்சாகிவிட்டன. அதனால், மக்களுக்கு மூச்சுத்திணறல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. கடந்த ஜூன் 1997 மற்றும் மார்ச் 2013 -ல் இந்த ஆலையில் இருந்து வெளியான அதிகப்படியான நச்சுவாயுக் கசிவினால், ஆலையைச் சுற்றி 10 கி.மீ தொலைவில்  உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அப்போதிருந்து, ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தலைதூக்கும்போது  மூடப்படுவதும், பிறகு அனுமதியுடன் திறந்து உற்பத்தியைத் தொடங்குவதுமாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

 கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க