‘பேனா முள் உனை அடக்கும்’ - எஸ்.வி.சேகரை எச்சரித்த பத்திரிகையாளர்கள்!

பத்திரிகையாளர்கள்

ஊடகத்துறை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் பெண்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து எஸ்.வி.சேகர் முகநூலில் பகிர்ந்த கருத்து, பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ்.வி.சேகரின் இந்த முகநூல் பதிவுக்குப் பலரும் கடும்  கண்டனங்களைப்  பதிவுசெய்துவரும் வேளையில், பத்திரிகையாளர்களும் எஸ்.வி.சேகரைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், இன்று ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் எஸ்.வி.சேகரின் நாகரிகமற்ற, தரக்குறைவான பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூரம்பட்டி 4 ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகத்துறையினர் பலரும் கலந்துகொண்டனர்.

‘ஊடகத்துறை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் சகோதரிகளை மிகத்  தரக்குறைவாக, கொச்சைப்படுத்தும் விதத்தில் எஸ்.வி .சேகர் கருத்து பதிவிட்டிருக்கிறார் . இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க தலைமையும் எஸ்.வி. சேகரைக் கண்டிக்க வேண்டும். இனியும் நாவை அடக்காமல் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்துகொண்டால், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பேனா முள் உனை அடக்கும்’ என எஸ்.வி .சேகரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகத்துறையினர் கோஷங்களை எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!