வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (21/04/2018)

கடைசி தொடர்பு:07:55 (21/04/2018)

'பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தினகரன் தரப்பு தயாராகிவருகிறது' கே.சி.பழனிசாமி சொல்லும் சீக்ரெட்!

கே.சி பழனிசாமி

" 'அ.தி.மு.க-வின் விதிப்படி தேர்தல் நடத்தி, தொண்டர்களே பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வதை நாங்கள்  ஏற்கத் தயாராக இருக்கின்றோம்'  என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில்  தினகரன் தரப்பு தெரிவிக்க உள்ளது" என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட  கே.சி.பழனிசாமி, கோவையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அ.தி.மு.க-வில் தற்போது இருக்கும்  ஒருங்கிணைப்பாளர்,  துணை ஒருங்கிணைப்பாளர்  பொறுப்புகள் செல்லாது என்று மே மாதம் முதல் வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க-வின் விதிப்படி தேர்தல் நடத்தி அதன்மூலம் தொண்டர்களே பொதுச்செயலாளரைத் தேர்வுசெய்வதை நாங்கள்  ஏற்கத் தயாராக இருக்கின்றோம்''  என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில்  தினகரன் தரப்பு தெரிவிக்க உள்ளது.  

ஆனால், பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் பின்  வாங்குகின்றனர். ஆனால், தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரைத் தேர்வுசெய்ய வேண்டுமென்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்திரவிடலாம். பொதுச் செயலாளர்குறித்த எந்த முடிவையும் பொதுக்குழு எடுக்க முடியாது. அதற்கு பொதுக்குழுக்கு அதிகாரம் கிடையாது. அ.தி.மு.க சட்ட விதிகளின்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்வுசெய்ய முடியும்.

இன்னொரு கட்சித் தலைவர் சொல்வதைக் கேட்டு நடப்பவர்கள் அ.தி.மு.க-வுக்கு தலைமைதாங்க முடியாது.  இருவரும் தங்கள் பதவி தப்பித்தால் போதும் என்று செயல்படுகின்றனர்.

அ.தி.மு.க-விலிருந்து இதற்கு முன்பே நான் நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சி.வி. சண்முகம் சொல்கிறார்.  அப்படி நான் நீக்கப்பட்டதற்கான  ஆதாரத்தைக் கொடுத்தால், கட்சிப் பணிகளில் இருந்தே நான் விலகிக்கொள்கிறேன். சி.வி.சண்முகம் நிதானம் இழந்து பேசக்கூடியவர்.  அ.தி.மு.க- மோடி முன்னேற்றக் கழகமாக மாற்ற பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படாத முதலமைச்சரைப் போல செயல்படுகிறார்.

அ.தி.மு.க கட்சியோ, பா.ஜ.க-வின் கிளைபோல செயல்படுகிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டோ, தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டோ நடத்த வேண்டும். அதற்கான உத்தரவுகள், நீதிமன்றம்மூலம் விரைவில் வரலாம்" என்றார்.