வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (21/04/2018)

கடைசி தொடர்பு:07:45 (21/04/2018)

எஸ்.பி., அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு!

திருநங்கை

ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், திருநங்கை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓவியா, அனு. திருநங்கைகளான இவர்கள், புகார் மனு ஒன்றைக் கொடுப்பதற்காக நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, திருநங்கை ஓவியா திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.  அதைப் பார்த்து பதறியடித்து ஓடிவந்த போலீஸார், தீக்குளிக்க முயன்ற ஓவியாவைத் தடுத்துநிறுத்திக் காப்பாற்றினர். விசாரணையில், போலீஸ் எஸ்.ஐ ஒருவர் தகாத வார்த்தை பேசியதால்தான் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதாக ஓவியா தெரிவித்தார்.

திருநங்கை

இதுகுறித்து ஓவியாவிடம் பேசினோம். “திருட்டு வழக்கில் ஈடுபட்டதாகக் கூறி என்னுடைய தம்பியை சித்தோடு போலீஸார் கைது செய்தனர். அப்போது, என் தம்பியின் டூவீலரையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். அந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்த என்னுடைய தம்பி, போலீஸாரிடம் அந்த டூவீலரை தருமாறு கேட்டுள்ளான். ‘10 ஆயிரம் கொடுத்தால்தான் டூவீலரைத் தருவோம்’ என போலீஸார் சொல்லியிருக்கின்றனர். உடனே, நானும் என்னுடைய தங்கை அனுவும் சித்தோடு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, ‘எங்களிடம் 1000 ரூபாய்தான் இருக்கிறது. அதை வாங்கிக்கொண்டு டூவீலரைக் கொடுங்கள்’ எனக் கேட்டோம். உடனே கடுப்பான சித்தோடு ஸ்டேஷன் எஸ்.ஐ, திருநங்கைகளை எண்ணால் குறிக்கும் அந்த வார்த்தையைச் சொல்லி, ‘இந்த நாயை எல்லாம் யார் ஸ்டேஷனுக்குள்ள விட்டா. ஒழுங்கு மரியாதையா வெளியே போயிடுங்க’ என அசிங்கமாகப் பேசினார். சுற்றிலும் போலீஸார் இருந்ததால், பயந்துகொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டோம். இருந்தாலும், அந்த எஸ்.ஐ என்னைத் தரக்குறைவாகப் பேசியது கஷ்டமாக இருந்தது.  இதுவரைக்கும் என் மனசு கஷ்டப்படுற மாதிரி யாரும் என்னை அப்படிப் பேசியதில்லை. அப்படியிருக்க, அந்த எஸ்.ஐ பேசியதை என்னால தாங்கிக்க முடியலை. அந்த மனக் கஷ்டத்தில்தான் செத்துப்போயிடலாம்னு தீக்குளிக்க முயன்றேன்” எனக் கண்ணீர்விட்டுக் கதறினார்.