வெளியிடப்பட்ட நேரம்: 08:13 (21/04/2018)

கடைசி தொடர்பு:08:30 (21/04/2018)

காவிரிக்காகத் தடையை மீறி நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திருச்சியில்  போராட்டம்  தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.   அந்த வகையில், அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. 

போராட்டம்


இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கண்டோன்மென்ட் போலீஸ் சரக உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கூடவே, திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலைய போலீஸாரும், ரெயில்வே பாதுகாப்புப் படைவீரர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், அனைத்திந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர்  ஜோதிகுமார் தலைமையில்,  மாநில பொதுச்செயலாளர் தண்டாயுதபாணி, மகளிர் அணிச் செயலாளர்  நாச்சிசேகர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருச்சி வந்திருந்த ஏராளமானோர்,   ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்து, திருச்சி ஜங்ஷன் ரயில்  நிலையம் வரை  ஊர்வலமாக வந்தனர். 


அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால், போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, ரயில் நிலையம் முன்பு  அமர்ந்து, காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு அழுத்தம்கொடுக்காத மாநிலஅரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.   இதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களிடம்  கலைந்துபோகவில்லை என்றால் கைதுசெய்வோம் என எச்சரித்தனர். ஆனாலும், கலைந்து செல்ல  முடியாது எனக் கூறிய விவசாயிகள், ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார்  தடுத்துநிறுத்தி கைது   செய்தனர். இதில், 230 பெண்கள் உள்பட 290 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இறுதியாக ஜோதிகுமார்,“காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்  போராட்டம் நடத்திவருகிறோம். அதன்படி இன்று திருச்சி மாவட்டம் ஜீயர்புரம் அருகே  உள்ள முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி  தற்கொலைக்கு முயலும்  போராட்டம் நடத்தப் போகிறோம் என்றவர், மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல  முயன்ற கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க