நிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்!

நிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்!

நிர்மலா தேவி விவகார விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் மாளிகையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பை விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நிர்மலா தேவி

நிர்மலா தேவி விவகாரம் குறித்து காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி பிரிவும், ஆளுநர் நியமித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ``விசாரணைக் குழுவினர் நிர்மலா தேவியின் பின்னணி குறித்து மட்டும் ஆராயாமல், பல்வேறு வகையில் விசாரணை செய்ய வேண்டும்" என்கின்றனர் மதுரை காமரார் பல்கலை பேராசிரியர்கள். தவிர, விசாரைண கமிஷன் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் பட்டியலிட்டனர். 

1. குற்றவியல் விசாரணைக்கு இடையூறு இல்லாத வகையில் மற்றும் குற்றவியல் வழக்கைப் பாதிக்கக்கூடிய எந்தப் பரிந்துரைகளையும் சந்தானம் கமிஷன் வழங்கக்கூடாது. நிர்மலாதேவிக்கு பதவி ஆசை காட்டியே தங்கள் தேவையை நிறைவேற்றப் பல்கலைக்கழக அதிகாரிகள் முயன்றதாகத் தெரிய வருவதால், பல்கலைக்கழகம் தரும் தன்னிலை விளக்கம் எதையும் சந்தானம் குழு ஏற்றுக்கொள்ளக் கூடாது. 

2. கடந்த ஓராண்டில் நிர்மலாதேவி எத்தனை முறை பல்கலைக்கழக வேண்டுதலின் பேரில் பல்கலைக்கழக நிகழ்ச்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்தார் என்பதையும், மாணவிகள் யாருக்காக எந்தக் காரணத்துக்காக தேவைப்பட்டனர் என்பதையும் அவரிடம் விசாரிக்க வேண்டும். 

3. நிர்மலாதேவி பின்னணியில் தொடர்புடைய பல்கலைக்கழக அதிகாரிகளை குற்றவியல் வழக்கு முடியும் வரை இடைக்கால பணிநீக்கம் செய்யப் பரிந்துரை செய்ய வேண்டும். 

4. உயர்கல்விதுறை மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடர்புடைய எத்தனை ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளது என்பதையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

5. தவறு செய்த அதிகாரிகளுக்கும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும்.

6. பல்கலைக்கழகங்களின் நடைமுறை விதிகளில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கத் தேவையான விதிமுறை மாற்றம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கம் குறித்து, குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும். 

7. தன்னாட்சி பெற்ற கல்லூரியாக இருந்தாலும் கூடுதல் மாணவர் சேர்க்கை, கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குதல், மாணவர்கள் சான்றிதழ் மற்றும் யூ.ஜி.சி நிதி உதவிகளைப் பெறுதல் என, கல்லூரி அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை நம்பியிருப்பதால், கல்லூரியில் இதுபோன்ற குற்றங்களுக்கு கல்லூரி நிர்வாகம் உடன்பட வேண்டியிருக்கிறது. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும்.

8. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இடையேயான பணிவிதிகள் வெளிப்படையான முறையில் அமைய, விதிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை விசாரணை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். பணிநியமனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கி இது போன்று நிகழ்வை நடைபெறுவதைத் தடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

9. நிர்மலா தேவி தனது ஆடியோ பேச்சில் தொலைநிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணியையும், தொலைநிலைக்கல்வி பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணி குறித்தும் பேசுகிறார். இது பணம் கொழிக்கும் பிரிவுகளாக இருக்கின்றன. இந்தப் பிரிவில் தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர்களுக்கு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இதனையும் ஒரு வரைமுறைக்குள் கொண்டு வர வேண்டும். 

10. தொலைநிலைக்கல்வியில் நியமிக்கப்படுபவர்கள் குறுக்குவழிகளில் பதவி பெறுபவர்களாக இருக்கின்றனர். இந்த நியமனம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரிவுகளில் பணி நியமனத்துக்கும் விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்" என்கின்றனர்.

பேராசிரியை பாரதி ஹரிசங்கர்சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பாரதி ஹரிசங்கர்,  ``இதுபோன்ற தவறான விஷயங்களை உடனுக்குடன் பொதுவெளிக்கு வர வேண்டும். பார்வைக்கு வராமல் இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. பதவி பெறவும், புகார் தெரிவித்தால் பழிவாங்கவும் வாய்ப்பு இருப்பதால் எந்தப் புகாரும் முறையாகப் பதிவாகாது. இதனால் பெரும்பாலான விஷயங்கள் வெளியே வராமல் போகின்றன. இது மாணவிகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் நடக்கிறது. ஒரு ஆசிரியர் தன்னுடைய சொந்தப் பணிக்கு மாணவர்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால், பர்சனலுக்கும் புரஃபஷனலுக்கும் உள்ள இடைவெளியை சரியாக கடைப்பிடிக்காததே இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணம்.

எல்லாப் பல்கலைக்கழகத்திலும் இன்டெர்னல் கம்பிளையன்ஸ் கமிட்டியும் (Internal complaints committee) இருக்க வேண்டும். இந்தக் கமிட்டியில் மாணவிகளும், பெண் ஆசிரியைகளும் தங்களுக்கு இழைக்கப்படும் தவறுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். ஆனால், புகார்  தெரிவித்தபின்பு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான கண்காணிப்பும் இல்லை. இதையும் முறைப்படுத்த வேண்டியது அவசியம்" என்றார்.

ஆசிரியர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கல்வி சமூகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே நிதர்சனம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!