வெகு சிறப்பாகத் தொடங்கியது மலைக்கோட்டை சித்திரைத் திருவிழா

தென் கயிலாயம் என  அழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோயில் சித்திரை தேர்த்திருவிழா,  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை

திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் எனப் புகழப்பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயம், மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அதன்படி, நேற்று மாலை தாயுமானவர் சுவாமி  மற்றும் அம்பாள், உற்சவமூர்த்திகளுடன் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, தாயுமானவர் சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள்  ஓத, மிதுன லக்னத்தில் ரிஷபக் கொடியேற்று வைபவம் நேற்று இரவு வெகு சிறப்புடன் நடைபெற்றது.

ஒரு நாட்டின் வளம், நலம், செல்வம் ஆகிய அனைத்தும் சிறந்து விளங்குமானால், அந்த நாட்டை 'கொடி நீதி வழுவாத ஆட்சி' என்பார்கள். அதுபோல இறைவனுக்கும் கொடி மிகவும் முக்கியமானது. பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு 'இடபக்கொடி'யும், சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு 'சிம்மக்கொடி'யும், விஷ்ணு வடிவமான பெருமாளுக்கு 'கருடக்கொடி'யும் அமைந்துள்ளது. இவற்றில், தனி அம்பாள் கோயில்களில் மட்டுமே சிம்மக்கொடி ஏற்றப்படும். சிவாலயத்தில் உள்ள அம்பாளின் திருவிழாக் காலங்களில், ரிஷபக் கொடி  ஏற்றப்படும். ஓர் ஆலயத் திருவிழாவின் தொடக்க நாளில், கொடியேற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

இதையடுத்து நடந்த மகா தீபாராதனையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியையும் அம்பாளையும் வழிபாடு செய்தனர். மேலும், செட்டிப் பெண் பிரசவம் பார்க்கும் வைபவமும், தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!