வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (21/04/2018)

கடைசி தொடர்பு:13:24 (21/04/2018)

ஒரே நேரத்தில் 250 போலீஸார் பணியிட மாற்றம்! நெல்லை எஸ்.பி அதிரடி

நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றிய 250 போலீஸாரை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிய 250 போலீஸாரை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் - எஸ்.பி

நெல்லை மாவட்டத்தில், சங்கரன்கோவில், மானூர், ஆலங்குளம், முக்கூடல், தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், வள்ளியூர், ராதாபுரம், சுத்தமல்லி, சேரன்மகாதேவி என மொத்தம் 84 காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸார், நீண்ட காலமாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வந்ததால், குற்றவாளிகளுக்கு சாதகமாகச் செயல்படுவதாக தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன.

சில காவல் நிலையங்களில் பணியாற்றிய போலீஸாரே மணல் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன. இன்னும் சில காவல் நிலையங்களில் பணியாற்றிய போலீஸார், மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் மது பாட்டில்களை ஆள் வைத்து விற்பனைசெய்வதும் தெரியவந்தது. தொடர்ந்து நீண்ட காலமாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றியதால்தான் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது தெரியவந்தது. 

அதனால், ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகப் பணியாற்றும் காவலர்களின் பட்டியலை எடுக்க நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த சில வாரங்களாக இந்தப் பணிகள் நடைபெற்றன. அதில், மாவட்டம் முழுவதும் 200-க்கும் அதிகமானோர் ஒரே காவல்நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றியது தெரியவந்தது. 

அதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள 250 போலீஸாரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டார். உடனடியாக அனைவரும் புதிய இடங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், காவல் நிலையங்களில் நடந்துவந்த கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.