அரசுப் பள்ளிக்காக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்விச் சீர் தந்த கிராமம்! | This village donates 2 lakh worth stuffs for a government school!

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (21/04/2018)

கடைசி தொடர்பு:14:11 (21/04/2018)

அரசுப் பள்ளிக்காக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்விச் சீர் தந்த கிராமம்!

அரசுப் பள்ளிக்காக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்விச் சீர் தந்த கிராமம்!

அரசுப் பள்ளி

மாணவர்கள் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் முடிவுக்கு தமிழக அரசு வந்திருக்கும் நிலையில், ஒரு கிராமத்தின் மக்கள் அனைவருமே  பள்ளியை நோக்கி வரும் வகையில் முழுமுயற்சி எடுத்து, பெரு வெற்றியைப்  பெற்றிருக்கிறது ஓர் அரசுப் பள்ளி. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி ஒன்றியத்தின் நந்திமங்கலம் எனும் அழகான ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிதான் அது.

சத்தியசீலன் இந்தப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை, நந்திமங்கலம் கிராம மக்கள் வாரி வழங்கியுள்ளனர். அதை ஒரு திருவிழாவாகவும் கொண்டாடியுள்ளனர். அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவே தயங்கும் சூழலில் எப்படி இது சாத்தியமானது? 

அந்தப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரான சத்தியசீலன், "அரசுப் பள்ளிகள்தான் பெற்றோர்களுக்கு எந்தவொரு செலவுமின்றி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைத் தருகிறது. ஆனால், பல காரணங்களால் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்கிறார்கள். அவர்களைப்  பள்ளிக்கு வரவைக்க நாங்கள் எடுத்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான், ஊர்கூடி எடுத்த கல்விச் சீர் திருவிழா. அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு, எங்கள் பள்ளிகுறித்துச் சொல்கிறேன்'' என உற்சாகத்துடன் தொடர்கிறார்.

அரசுப் பள்ளி

''எங்கள் மாணவர்கள், தமிழில் நன்றாகப் படிப்பதுடன் மிகத் தெளிவாக எழுதவும் செய்வார்கள். அவர்களின் திறனை இன்னும் மேம்படுத்த, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்கிறோம். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல், ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்க பழக்குகிறோம். தாங்கள் படித்த செய்திகளை வகுப்பறைகளில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் தருகிறோம். உலக நடப்புகளைத் தெரிந்துகொள்வதுடன் ஆங்கிலத்திறனை வளர்த்துக்கொள்ளவும் இது உதவுகிறது. எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியர் இல்லை. அதனால், ஒரு நிறுவனத்தின் உதவியோடு ஓர் ஆசிரியரை நியமித்திருக்கிறோம். அவர், வாரத்தில் மூன்று நாள் வந்து, மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறார். இதனால், கம்ப்யூட்டர் தொடர்பான டெக்னோ போட்டியில், எங்கள் பள்ளி மாணவர் பிரதீஷ் முதலிடம் பிடித்தார். மெள்ளக் கற்கும் மாணவர்களுக்காக, மாலை நேரத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம். சிறப்பாகப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, மாதந்தோறும் ஸ்டார் மாணவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிக முறை ஸ்டார் பட்டம் பெற்றவர், ஆண்டு முடிவில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவார். இப்படி இன்னும் பல செயல்பாடுகள் இருக்கின்றன" என்ற சத்தியசீலன், கல்விச் சீர் திருவிழா பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

"எங்கள் பள்ளியின் 'மேலாண்மைக் குழு' வில், பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குக் கிராம மக்களின் உதவியைக் கேட்க முடிவு எடுக்கப்பட்டது. ஊர் மக்களிடம் கேட்டபோது, நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்தது. பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மிகுந்த ஆர்வத்துடன் உதவ முன்வந்தார்கள். வெளியூரில் இருப்பவர்களும் அவர்களுடன் இணைந்தார்கள். இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வாங்கிவந்து எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். கம்ப்யூட்டர், மானிட்டர், யூபிஎஸ், மைக், ஸ்பீக்கர் செட், ஐந்து காற்றாடிகள், ஆபீஸ் டேபிள், வாளி, தண்ணீர் டிரம் என ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தார்கள். 5000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களையும் நூலகத்துக்குத் தந்தனர். இவற்றை, மேளதாளத்தோடும், வாணவேடிக்கையோடும் பள்ளிக்கு எடுத்துவந்து, மிகப்பெரிய மரியாதைசெய்து ஆசிரியர்களை நெகிழவைத்திருக்கிறார்கள். 'ஊர் கூடி கல்விச் சீர்' மூலம் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் கிடைத்தது முக்கியமான விஷயம் என்றால், இந்தப் பள்ளியுடன் மிகவும் நெருக்கமான உறவுகளாக கிராமத்து மக்கள் கிடைத்தது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது, தலைமை ஆசிரியர் சித்ரா உள்ளிட்ட ஆசிரியர்களின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி" என்கிறார் மகிழ்ச்சி பெருக. 

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியது. 
 


டிரெண்டிங் @ விகடன்