வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (21/04/2018)

கடைசி தொடர்பு:12:45 (21/04/2018)

'ஏற்றுக்கொள்ள முடியாது; எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை உறுதி'- சொல்கிறார் தமிழிசை

'சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி அவதூறாக எழுதிவிட்டு, பதிவை நீக்கிவிட்டேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்கிறார், தமிழிசை சௌந்தரராஜன். 

தமிழிசை  சவுந்தரராஜன்'

நடிகரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்தும் விதத்தில், தரக் குறைவான பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார். இவரின் பதிவுக்கு, பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதை உணர்ந்த அவர், சுதாரித்துக்கொண்டு, 'நண்பர் எழுதிய கருத்தைப் படிக்காமல் தவறுதலாகப் பதிவிட்டுவிட்டேன். அதனால், உடனடியாக பதிவை நீக்கிவிட்டேன்' என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், அவரின் இந்தச் செயலுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ''சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி அவதூறாக எழுதிவிட்டு, அதன்பின் இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் ஒரு கருத்தைப் பதிந்துவிட்டு, அதை நீக்கிவிட்டாலும், அக்கருத்து பரவிக்கொண்டேதான் இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், எஸ். வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறோம்'' எனக் கூறினார்.