டிரக்கியாஸ்டமி அறுவைசிகிச்சை வெற்றி!  24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு

காடுவெட்டி குரு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க நிர்வாகி காடுவெட்டி குருவுக்கு டிரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. அதனால், தற்போது அவருக்கு மூச்சு விடுவதில் இருந்த சிரமம் பெருமளவு குறைந்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குருவுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, பார்த்துவருகிறார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், நேற்றும் நேற்று முன் நாளும் மருத்துவமனைக்குச் சென்று குருவை பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்போது, காட்டுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு நேற்று பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். பரத், ஜெய்கணேஷ் உள்ளிட்ட மருத்துவர்களும் சில மணி நேரம் நீடித்த இந்த அறுவைசிகிச்சையின்போது உடனிருந்தனர்.

டிரக்கியாஸ்டமி சிகிச்சை காரணமாக, குருவுக்கு மூச்சு விடுவதில் இருந்த சிரமம் பெருமளவு குறைந்துள்ளது. அவரது உடல்நிலையை  முன்னேற்ற, மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!