`எஸ்.வி.சேகரை வேடிக்கைபார்த்தபடி, செய்தியாளர்களைக் கைதுசெய்வது கேலிக்கூத்து!' - கே.பாலகிருஷ்ணனன்

செய்தியாளர்

''அவதூறுசெய்து எழுதியும் பேசிவரும் பா.ஜ.க-வின் ராஜா, சேகர் ஆகியோர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,போராடும் செய்தியாளர், பத்திரிகையாளர்களைக் கைதுசெய்வது கேலிக்கூத்தானது'' என்று சி.பி.எம் கட்சி கண்டித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தைத் தொட்டு, அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட ஆளுநரின் தகாத செயலை அரசியல் கட்சிகள் கண்டித்தன;  பத்திரிகையாளர்களும் கண்டித்தனர். இந்நிலையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி, மிகவும் தரக்குறைவாகப் பதிவிட்டிருந்தார். எஸ்.வி. சேகரின் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி. சேகரைக் கண்டித்து, பத்திரிகையாளர்கள் பா.ஜ.க அலுவலகம் முன்பும், நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் பத்திரிகையாளர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

தந்தை பெரியார் உள்பட மக்கள் மதிக்கும் தலைவர்கள், பெண்கள், பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசுவது, அவமரியாதைசெய்வது போன்ற செயல்களை, ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர். இவர்கள்மீது தமிழக அரசும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைபார்த்து வருகின்றனர். ஆனால், நியாயம் கேட்டுப் போராடுபவர்களை மட்டும் காவல்துறையினர் கைதுசெய்துவருவது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். எனவே, பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்திப் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.வி. சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!