மாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்! | An open letter from women journalists to S.Ve.Sekhar and H.Raja!

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (21/04/2018)

கடைசி தொடர்பு:13:13 (21/04/2018)

மாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்!

வருத்தம், மன்னிப்பு எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து கேளுங்கள் நீங்கள். 

திரு. ஹெச். ராஜா, திரு. எஸ்.வி.சேகர் அவர்களுக்கு... வணக்கம். 

 

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில், கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை. சட்ட தண்டனைக்குரியவை. எந்தவொரு பிரச்னையென்றாலும், உடனே பெண்களைக் குறிவைத்துப் பேசும், அவர்களை 'கேரக்டர் அசாஸினேஷன்' செய்யும், வக்கிரர்காரர்கள் ஏந்தும் அந்த ஆயுதத்தைத்தான் நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள். இதன் மூலம், உங்கள் 'தரத்தை' நீங்களே வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறீர்கள். இன்று மாநிலமே உங்கள் மீது வெறுப்பு, அருவருப்பு கொண்டுள்ளது. 

ஹெச்.ராஜா - எஸ்.வி. சேகர்

ஒரு கல்லூரிப் பேராசிரியர், தன் மாணவிகளை உயரதிகாரிகளுக்கு இரையாக்க முனையும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, மாநிலத்தின் ஆளுநரைச் சுற்றிச் சுழன்று நிற்கிறது. அது குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஆளுநர், ஒரு பெண் பத்திரிகையாளரைக் கன்னத்தில் தட்டுகிறார். பின்னர் அவரே, மன்னிப்பும் கேட்கிறார். இதற்கிடையில், அவருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்து நீங்கள் உளறிக் கொட்டியிருக்கும் வார்த்தைகள், உங்கள் மனதின் அழுக்குகள். 

 

ஹெச்.ராஜா அவர்களே, இந்தப் பிரச்னையில் சம்பந்தமே இல்லாமல்  ஒரு பெண் அரசியல்வாதி குறித்து நீங்கள் உங்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளில்,  யாரை இழிவுபடுத்திவிட்டதாக நினைத்துக் களிப்புற்றீர்கள்? உண்மையில், அந்த வார்த்தைகளில் இழிவுபட்டிருப்பது, உங்களுடைய அகம்தான். சம்மந்தப்பட்டவரின் பொது வாழ்க்கை குறித்து நீங்கள் விமர்சனங்கள் வைத்திருந்தால், அது ஒரு அரசியல்வாதியின் கருத்தாக, வாதமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் பெண்மையை, தாய்மையைக் குறிவைத்த அந்த அழுகிப்போன எழுத்துகளில் வடிந்தது, உங்கள் மனதின் சீழ். தெருச்சண்டைகளில், ஒருவரை இகழ பெண்களைச் சுட்டும் கெட்ட வார்த்தைகளைச் சட்டென உமிழும் தரம்கெட்டவர்களின் செயல்தான், இந்தப் பதிவின் அடிப்படை நிறம். ஒரு பொதுவெளியில் உங்களின் அந்த மனதைப் பிளந்து காட்டியிருக்கிறீர்கள். அறிந்துகொண்டோம்.

 

அடுத்ததாக, திரு. எஸ்.வி. சேகர் அவர்கள்.

 

இதே ஆளுநர் பிரச்னை. ஆளுநர் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு மன்னிப்பு அறிக்கை விடுகிறார். உங்களுக்கு கோபம் தலைக்கேறி, உங்களின் அந்த 'நியாயம்' வெளிப்படுகிறது, உங்கள் சமூக வலைதளத்தில் நீங்கள் பகிர்ந்ததொரு பதிவின் மூலமாக. 'பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் உயர் அதிகாரிகளை, நிறுவனத் தலைமைகளை 'திருப்தி' செய்து வாய்ப்புப் பெற்றவர்களே' என்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது, 'இப்படிப்பட்டவதானே நீ? உன்னை கவர்னர் கன்னத்தில் தட்டினதால் என்ன?' என்பதைத்தானே? மிகக் கடுமையான கண்டனங்கள்.

வார்த்தைக்கு வார்த்தை வக்கிரமும், ஆணவமும் கோத்த அந்தப் பதிவைப் பகிர, என்ன தைரியம் உங்களுக்கு என்ற குரல்கள் வலுக்க ஆரம்பித்தவுடன், அவற்றை எதிர்கொள்ளத் திராணியற்று, 'அது நண்பரின் போஸ்ட், படிக்காமல் ஷேர் செய்துவிட்டேன்' என்கிறீர்கள். எனில் அந்தப் பதிவுக்கு, 'ஒரு பல்கலைக்கழகமும், ஆளுநரும், கன்னியின் கன்னமும்' என அருவருப்பான தலைப்பை நீங்கள் கொடுத்துப் பகிர்ந்திருந்ததும், அதைப் படிக்காமலேயேதானா? கொதித்தெழுந்த பத்திரிகைத் தோழமைகள் வீதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள். நீங்கள், ஏசி அறைக்குள் இருந்தபடி அதிகார மையங்களுடன் ஆலோசனையில் இருக்கிறீர்கள். தோழர் பாலபாரதி சொல்வதுபோல, வருத்தம், மன்னிப்பு எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து கேளுங்கள் நீங்கள். 

பெண் பத்திரிகையாளர்களின் பணிவாழ்வை அவ்வளவு கொச்சையாகச் சுட்டும் நீங்கள், இந்தத் துறையில் ஆர்வமும் வியர்வையுமாக ஓடிக்கொண்டிருக்கும் எங்களின் உழைப்பைப் பற்றி அறிவீர்களா? ஒவ்வொரு செய்தி சேகரிப்புக்கும், நாங்கள் தரும் விடாமுயற்சி எவ்வளவு தெரியுமா? கால நேரம் பார்க்காமல் ஓர்  அசைமென்ட்டை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெண்ணின் அயற்சி கலந்த மனநிறைவை உங்களால் உணரமுடியுமா என்ன? மாநகரங்களில், பிரஸ் மீட்களில், 50 ஆண் பத்திரிகையாளர்களுக்கு நடுவே 10 பெண் பத்திரிகையாளர்கள் சிறுபான்மையாக நின்றாலும், அது எங்களுக்கு நம்பிக்கை தரும் எண்ணிக்கையே. சிறுநகரங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை பிணவறை வரை,  20 ஆண் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாக ஓடி உழைத்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் உழைப்பு, எவ்வளவு தீரம் தெரியுமா? ஒரு எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து, தன் மாவட்டத்துச் செய்திகளை உலகுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்களின் வலிமை வணக்கத்துக்குரியது.  

பத்திரிகைத் துறைக்கு தங்கள் பெண்களை வேலைக்கு அனுப்பியிருக்கும் ஆயிரமாயிரம் வீடுகளில், உங்கள் வார்த்தைகள் என்ன மாதிரியான வலியைக் கொடுக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்தீர்களா? பெண் செய்தியாளரிடம், 'நீங்க அழகா இருக்கீங்க' என்று சொல்லும் அமைச்சர், பெண் செய்தியாளரின் கன்னத்தைத் தட்டும் கவர்னர், 'பெண் பத்திரிகையாளர்கள் எல்லாம் 'அப்படித்தான்' ' என்ற உங்களின் 'ஆய்வறிக்கை'... இதையெல்லாம் பார்த்த எங்கள் அப்பாவும், அம்மாவும், சகோதரர்களும், சகோதரிகளும், கணவரும், மகன்களும், மகள்களும், நட்பும் கொண்டிருக்கும் கோபக் கனலை வெப்பம் குறையாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள், வாக்குப் பெட்டியில் சேர்க்க. வரும் ஒரு நாள். தேர்தல் திருநாள். 

பெண் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்

பெண் பத்திரிகையாளர் ஒருவர், உங்கள் அரசியல் சார்புக்கு எதிரான ஒரு கருத்தைக் கூறியதால், பத்திரிகை துறையே கேவலமானது என்று வாய்மொழிந்திருக்கிறீர்கள். நாளை மருத்துவத் துறை, சட்டத் துறை, காவல்துறை சேர்ந்த ஒரு பெண், உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக ஒரு கருத்தைக் கூறினால், 'அந்த டிப்பார்ட்மென்ட்ல இருக்கிற பொம்பளைங்களே இப்படித்தான்' என்பதைத்தான் இனி உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும். இதுதான் நீங்கள் செய்யும் அரசியலா? 

களத்தில் உடன் நிற்பது முதல் வழிகாட்டுவதுவரை, பணி வாழ்வில் எங்களுக்குப் பலமாகவும், அரணாகவும் இருக்கும் சக ஊடக நண்பர்களையும், சீனியர்களையும், எங்கள் திறமைக்கான அங்கீகாரம் அளிக்கும் நிறுவனத் தலைமைகளையும் சேர்த்தே நீங்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள். கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்.

செய்திகளை முந்தித் தருவது, பிழையற்று, தெளிவாக வழங்குவது உள்ளிட்ட பணித் தேவைகளுடன், எங்கள் செய்தியின் மூலம் ஓர் அவலம் மாறிவிட வேண்டும், சம்பந்தப்பட்ட மக்கள் நன்மை பெற்றுவிட வேண்டும், ஒரு சின்ன மாற்றம் நடந்துவிட வேண்டும் என்ற பணி அறத்தையும் சேர்த்தே எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம். கரடு, முரடான பாதைகளிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், உடல் நடுங்கும் உறை பனியிலும் நாள் முழுக்க வேலைபார்க்கிறோம். மாதவிடாய் கால வலியுடனும், கர்ப்பகால சோர்வுடனும், பால்கட்டும் மாருடனும், மெனோபாஸ் அவஸ்தையுடனும் என, இந்த உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் இப்படி எங்கள் பாடுகளினூடேதான் நாங்கள் செய்தியாக்கி உலகுக்குத் தருகிறோம். அந்த உழைப்புக்கான பலனை, அங்கீகாரத்தைப் பெறுகிறோம். 

ஆனால், நாங்கள் வாய்ப்புப் பெறுவதற்கான 'ஃபார்முலா' ஆக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள், எவ்வளவு விஷமானவை? இன்று 40 வயதுகளில் இருக்கும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் 20 வயதுகளில் இந்தத் துறைக்கு வந்தபோது அவர் எத்தனை பிரச்னைகளைக் கண்டிருப்பார்..? எழுத்து, உழைப்பு, அனுபவம், அறிவு என்ற துடுப்புகள்கொண்டு காலம் கடந்து, இன்று இந்தத் துறையில் தனக்கென ஓர் இடம் உருவாக்கிக்கொண்டிருப்பார்..? நீங்கள் சொல்லியிருக்கும் 'ஃபார்முலா' அந்த சீனியர் ஜர்னலிஸ்ட் பெண்களின் அர்ப்பணிப்பை எல்லாம் எவ்வளவு வக்கிரத்துடன் புறந்தள்ளுகிறது..? நீங்கள் சொல்லியிருக்கும் 'ஃபார்முலா' இன்று 20 வயதுகளில் இந்தத் துறைக்கு வந்து உற்சாகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் தங்கைகளை எல்லாம் எவ்வளவு ஆணவத்துடன் பார்க்கிறது? 

சுட்டாலும் வெண்மை தரும் சங்கு. நாங்கள் சங்கு..! 


டிரெண்டிங் @ விகடன்