வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (21/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (21/04/2018)

`எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட வேண்டும்!' கோவையில் கொந்தளித்த பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள் குறித்து, தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.வி.சேகருக்கு எதிராகக் கோவை பத்திரிகையாளர்கள் போராட்டம்

‌பா.ஜ.க-வின் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் குறித்து, சமூகவலைதளத்தில் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.வி.சேகருக்கு, பத்திரிகையாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எஸ்.வி.சேகர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது, நெல்லை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், எஸ்.வி.சேகர்மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைது செய்ய வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எஸ்.வி.சேகர் வீட்டின்மீது கல் எறிந்ததற்காக, சென்னை பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தின்போது கோவை பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் பேரணியாகச் சென்ற பத்திரிகையாளர்கள், எஸ்.வி.சேகர்மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சந்தித்து, கோரிக்கை வைத்தனர்.