`உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்பட இதுதான் காரணம்!’ தம்பிதுரை கணிப்பு

``காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து போராடும். அ.தி.மு.க எம்.பி-க்கள் அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்; மத்திய அரசை வலியுறுத்துவார்கள். ஆனால், காவிரி விவகாரத்துக்காக அ.தி.மு.க எம்.பி-க்கள் ராஜினாமா செய்வதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்துத் தெரிவித்துள்ளார். 

தம்பிதுரை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று கரூர் வந்துள்ளார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஏற்கெனவே,காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளுங்கட்சி சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அதோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இருவரும் உத்தரவிட்டுள்ளனர். அதற்கான, ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் வரும் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, `உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவைப் பதவி விலக வைக்க காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து  தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தம்பிதுரை, ``காங்கிரஸ் கட்சி கர்நாடகா மாநிலத் தேர்தலை மனதில் வைத்தே செயல்படுகிறது காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவி விலகக் கூறுவதிலிருந்தே, காங்கிரஸ் கட்சியின் சுயநலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அந்த முயற்சியில் அவர்களுக்குச் சுயநல உள்நோக்கம் இருக்கிறது என்று தோன்றுகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில் நீதிமன்றத்தையும், நீதியரசர்களையும் மிகவும் மதிக்கிறோம். காவிரி விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாது. அதற்காக, ராஜினாமா செய்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று சொல்வதிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!