`இது காவிரி, மீத்தேன், நியூட்ரினோ'- கண்காட்சியில் ஆச்சர்யப்பட வைக்கும் மாணவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு அழுத்தம் காட்ட, அதற்கு எதிராக தமிழ்நாட்டில் தினந்தோறும் போராட்டம் வெடிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராகத் திரண்டு போராடி வருகிறார்கள். அவர்களைவிட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள்தாம் கவனம் பெறுகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா என்ற கல்லூரி மாணவி வித்தியாசமாக காவிரி ஆறு பிரச்னைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவரது தந்தையின் நண்பரான சிவாஜி என்பவர், தனது மனைவி விஜயலட்சுமியோடு 170 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரித்து, அதை தமிழ்நாடு முழுக்க இயற்கை சம்பந்தமான, இயற்கை வேளாண் சார்ந்த நிகழ்ச்சிகளில் கண்காட்சி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கரூர் மாவட்டம், வானகத்தில் நடந்த நம்மாழ்வாரின் 80வது பிறந்தநாள் விழாவில் கண்காட்சியை நடத்தினார். அதற்குதான், இலக்கியாவும் வந்திருந்தார். அந்தக் கண்காட்சி அமைக்க ஓடியாடி உழைத்த அவர், அங்கே தமிழ்நாடு முழுக்க இருந்து இயற்கை மீது ஈடுபாடு நிறைந்த நூற்றுக்கணக்கானவர்கள் வந்ததை பார்த்ததும், அவர்களிடம் காவிரி உள்ளிட்ட ஆறுகளின் அழிவுநிலை பற்றி விழிப்பு உணர்வு ஊட்ட நினைத்தார். உடனே, அங்கே காட்சிக்கு வைத்திருந்த நாட்டுப் பனையோலையைப் பயன்படுத்தி செய்திருந்த, சிறு கூடைகளில் வெள்ளைப் பேப்பர்களை ஒட்டினார். அவற்றில், காவிரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ மற்றும் பாலாறு, முல்லை பெரியாறு என்று ஆறுகளின் பெயர்களை எழுதினார். அதை பார்த்த அங்கு வந்த இயற்கை போராளிகள், இலக்கியாவின் ஆறுகள் மீதான கரிசனத்தை மற்றவர்களுக்குக் கடத்தும் சமயோசிதமான போராட்ட குண சிந்தனையைக் கண்டு கைகுலுக்கிப் பாராட்டினர்.

கண்காட்சியில் ஆச்சர்யப்பட வைக்கும் மாணவி

இதுபற்றி, இலக்கியாவிடம் பேசியபோது, ``கல்லூரியிலும் எங்க மாவட்டத்திலும் காவிரி ஆறு, ஹைட்ரோகார்பனால் பாதித்த விவசாயம் உள்ளிட்ட கொடுமைகளை நான் மாணவிகளிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறேன். நாகை மாவட்டம் ஓ.என்.ஜி.சியால் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், நான் எங்கு போனாலும், அங்கு நாலு பேர் கூடி இருந்தால், ஏதோ ஒரு வடிவில் காவிரி போன்ற ஆறுகளின் நிலை பற்றியும் மீத்தேன் உள்ளிட்ட எமன்களின் பாதிப்புகள் குறித்த விழிப்பு உணர்வையும் ஏதோ ஒரு வடிவத்தில் அவர்களிடம் செய்துவிடுவேன். அந்த வகையில்தான், கரூர் மாவட்ட விழாவில் நிறைய இயற்கை ஆர்வலர்கள் வரவும், அப்படி திடீர்ன்னு யோசிச்சு விழிப்பு உணர்வு பண்ணினேன்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!