`நாங்கள் பிழைப்பதற்கு வழி செய்யுங்கள்' - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் புதுமண்டபம் கடைக்காரர்கள்!

மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அதையொட்டி அழகர் ஆற்றில் இறங்கும் வைபம் என சித்திரைத் திருவிழாவால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் புதுமண்டபக் கடைகளில் விற்கப்படுவது வழக்கம். ஆனால், பிப்ரவரி 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் புதுமண்டபத்தில் உள்ள கடைகளையும் காலி செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. கடைகளுக்கான மாற்றுஇடம் வழங்கப்படாத நிலையில் சாலை ஓரங்களில் கடை உரிமையாளர்கள் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். 

இது குறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது, ``மீனாட்சி கோயில் கொடியேற்றம் தொடங்கி ஆற்றில் இறங்கும் வைபத்துக்கு கள்ளழகர் வேடம் போடுவதற்குத் தேவையான உடைகள், தலைப்பாகை என நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்கிறோம். இவையனைத்தும் எங்களுடைய ஆறு மாத உழைப்பு. ஐந்து தலைமுறைகளாக எங்களுடைய தொழில் இதுதான்.

புதுமண்டபத்தில் 300 கடைகள் இருந்தன. வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம், தையல் கடைகள் எனக் கடைகளின் உரிமையாளர்கள் அனைவரும் தினக்கூலிகள். புதுமண்டபத்தைவிட்டு வெளியேறிய இந்த இரண்டு மாதங்களில் நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி இருக்கிறோம். சக கடை உரிமையாளர் சிதம்பரம் மன உளைச்சலால் காலமாகிவிட்டார்.

மற்ற மாதங்களைவிட சித்திரையில்தான் வியாபாரம் செழிப்பாய் இருக்கும். சொல்லப்போனால் இதில் வரும் வருமானத்தை வைத்துதான் பல மாதத்துக்கு சாப்பிடணும். திருவிழாவுக்கான பொருள்கள் விற்கும் வழக்கமான 100 கடைகளில் 30 கடைகள் மட்டுமே போட்டு உள்ளோம். சாலையோரத்தில் கடைகளை வைத்திருப்பது ரொம்ப சிரமமா இருக்கு. இங்கு ஒரு ஷெட்கூட கிடையாது. இத்தனை கடைக்காரர்களும் அந்தச் சிறிய மரத்தின் நிழலில்தான் உட்கார்ந்திருக்கணும்.

எங்களுக்காக ஒதுக்கிய குன்னத்தூர் சத்திரத்தில் வரும் 29-ம் தேதிதான் பூமிபூஜைபோட உள்ளனர். அதைக் கட்டி முடிக்கும் வரை புதுமண்டபத்தில் இடம் கொடுத்தால்போதும். எங்கள் குடும்பங்கள் பிழைத்துக்கொள்ளும்" என்கிறார்கள். செவி சாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!