`அக்கா நன்றாக இருக்கிறாள்; தங்கை இறந்துவிட்டாள்' - யானை ராஜேஸ்வரிக்காகக் கண்ணீர்விட்ட பாகன்

யானை ராஜேஸ்வரி

``யானையின் அக்கா வேதநாயகி பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நன்றாக இருக்கும்போது தங்கை சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி இறந்துவிட்டது'' என்று பாகன் பாஸ்கரன் கண்னீர்விட்டு அழுதார்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி. 43 வயது யானை பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு எழுந்து நிற்க முடியாமலும், திரும்பி படுக்க முடியாமலும் படுத்த படுக்கையாக உணவு எதுவும் உண்ணாமல் 40 நாள்களுக்கு மேல் மிகவும்  கவலைக்கிடமாக நிலையிலிருந்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் 12.20 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கோரிமேடு ஏ.டி.சி நகரில் உள்ள தோட்டத்தில் இருந்த யானை ராஜேஸ்வரிக்கு கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததோடு, சென்னையில் இருந்தும் சிறப்பு மருத்துவக்குழுவும் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தார்கள். பொதுமக்களும் ஆன்மிக அமைப்புகளும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை, யாகங்கள் நடத்தியும் நோய் முதிர்ச்சியால் மரணம் அடைந்துள்ளது. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பக்தர்களும் பொதுமக்களும் ராஜேஸ்வரி யானைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

யானை மரணம் அடைந்ததை அடுத்து சோகமாக இருந்த பக்தர் ரியாஷ், ''கோவில் நிர்வாகிகளின் அலட்சியத்தாலேயே ராஜேஸ்வரி இறந்துவிட்டது. ராஜேஸ்வரிக்கு பிறவியிலேயே முன் இடது கால் ஊனம். 3 காலில்தான் நின்றுகொண்டிருக்கும். கோயிலிலிருந்து லாரியில் கொண்டு வந்து இறக்கும்போது பின் காலில் அடிப்பட்டு தேறி வந்தது. இந்த நிலையில் முன் வலது கால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 40 நாள்களுக்கு மேலாக எழுந்து நிற்க முடியாமல் உணவு எதுவும் உட்கொள்ளாமல் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடிய நிலையில் பல துன்பங்கள் அனுபவித்து வந்தது.

 பாகன் பாஸ்கரன்இதையடுத்து முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் சென்றார். அவரின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சிகிச்சை கொடுத்து காப்பாற்ற முடியாது என்றால் கருணைக் கொலை செய்ய உத்தரவுவிட்டது. ஆனால், பொதுமக்கள் அனுமதிக்காததை அடுத்து கருணைக் கொலை செய்யப்படவில்லை. யானை உயிர் பிழைக்க  வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அனைவரும் பிரார்த்தனை செய்தோம். நேற்று சற்று நன்றாக இருந்த நிலையில் இன்று திடீரென மதியம் இறந்துவிட்டது'' என்று கண் கலங்கினார்.

இதுபற்றி யானைப் பாகன் பாஸ்கரனிடம் கேட்டதற்கு, ''நான் எட்டு வருடமாக இந்த யானையைக் கவனித்து வருகிறேன். பக்கவாத நோய் தாக்கிய உடனே அறநிலையத்துறையில் யானை கவனிப்பு மேற்பார்வையாளர்களான வன்னியதிலகம், சசிகுமாரிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் கவனித்து இருந்திருந்தால் யானைக்கு இந்த நிலை வந்திருக்காது.
இந்த யானையின் அக்கா வேதநாயகி பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நன்றாக இருக்கும்போது தங்கை சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி இறந்துவிட்டது'' என்று மேற்கொண்டு பேச முடியாமல் கண்னீர் விட்டு அழுதார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!