`இதுபோல் பல இடங்களில் நடக்கிறது' - நிர்மலா தேவி விவகாரத்தில் பொங்கிய மதுரை ஆதீனம் | Madurai Adheenam condemns nirmala devi issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/04/2018)

`இதுபோல் பல இடங்களில் நடக்கிறது' - நிர்மலா தேவி விவகாரத்தில் பொங்கிய மதுரை ஆதீனம்

``பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படுவதுபோல் கடுமையான தண்டனைகளை இந்தியாவிலும் கொடுக்க வேண்டும்" என்று மதுரை ஆதீனம் கூறினார்.

ஆதீனம்

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடகாவில் பா.ஜ.க, காங்கிரஸ் என்று எந்த அரசு அமைந்தாலும் காவிரி பிரச்னை  தீராது. கர்நாடக மக்கள் தமிழ்நாட்டு மக்கள்மீது இரக்கம் வைத்தால்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். மற்றபடி அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. சிறுமிகளை, பெண்களைப் பாலியல் வன்முறைகள் செய்யும் குற்றவாளிகளுக்கு அரபுநாடுகளில் கடைப்பிடிப்பது கடுமையான சட்டங்களை இந்தியாவிலும்  கொண்டுவந்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறையும்.

இந்தியாவில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிராகப் பெருகிவரும் பாலியல் வன்முறைகள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகவும் கவலையளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இதில் மனசாட்சியில்லாமல் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நாம் ஈவிரக்கம் காட்டக் கூடாது. அரபுநாடுகளில் அளிக்கும் தண்டனைபோல வழங்க வேண்டும். அல்லது குற்றவாளிகளின் கை மற்றும் கால்களை வெட்டினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி சம்பவம் போன்று பல இடங்களில் நடந்து வருகிறது. தற்போது அருப்புக்கோட்டை பிரச்னை அம்பலத்துக்கு வந்ததையடுத்து வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது. தனி மனித ஒழுக்கமே இதற்குத் தீர்வு. பொதுதளங்களில் அரசியல்வாதிகள் நாகரிகமாக நடந்துகொள்வதோடு வார்த்தைகளையும் கண்ணியத்தோடு பேச வேண்டும். தற்போதைய தமிழக அரசு நன்றாக நடந்து வருகிறது. சில குழப்பங்கள் இருந்தாலும் போகப் போக அது சரியாகிவிடும்

காவிரி பிரச்னை குறித்து தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே போன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் போராடி வருகிறார். ஆனால், கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற்று அங்கு  எந்த அரசு அமைந்தாலும் காவிரி பிரச்னையைத் தீர்க்க தீர்க்கமான முடிவை எடுக்க மாட்டார்கள். கர்நாடாக  மக்கள் காவிரி நீரை தமிழக மக்களுக்குத் தரக் கூடாது என்று கூறி, அங்கு போராடி வருகிறார்கள். அந்த மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் ராணுவத்தை வைத்துதான் தண்ணீரைப் பெற முடியும். அரசு அழைத்தால் ஆன்மிகவாதியான நான் கர்நாடக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார்" என்றார்.