தி.மு.க, வி.சி.க பாணியில் ஆளுநருக்கு கறுப்புக்கொடி - மார்க்ஸிஸ்ட் கட்சியும் முடிவு!

ஆளுநர்

பல்கலைக்கழகப் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்பப் பெறவும் அவர் நியமித்த விசாரணைக் குழுவை ரத்துசெய்யக் கோரியும் வரும் 25-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது. 

கோவையில் கடந்த நவம்பர் 15-ம் தேதி முன்னறிவிப்பு இல்லாமல் மாவட்ட அதிகாரிகளுடன் அரசுத் திட்டங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தினார். அதற்கு தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், பா.ம.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க-வும் வி.சி.க-வும் மட்டும் ஆளுநர் இதேபோல ஆய்வுகளைத் தொடர்ந்தால் அந்தந்த மாவட்டங்களில் அதை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தன. 

ஆனாலும் திருப்பூர், நெல்லை, குமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆளுநர் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். எதிர்ப்புப் போராட்டங்களும் இரண்டு கட்சிகளால் நடத்தப்பட்டன. இந்தநிலையில், அதைப் போலவே மார்க்ஸிஸ்ட் கட்சியும் ஆளுநரின் அண்மைக்கால நடவடிக்கையைக் கண்டித்து, அவர் அரசு விழாக்களுக்குச் செல்லும்போது கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவுசெய்துள்ளது. தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற மத்திய அரசு வலியுறுத்தியும் ஆளுநர் நியமித்த விசாரணைக் கமிஷனை ரத்து செய்யக்கோரி, வரும் 25-ம் தேதியன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி தன் கல்லூரி மாணவிகளைப் பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஈடுபடுத்தியது குறித்த விசாரணையில், தமிழக ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் உயர்கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. இப்பிரச்னையில் ஆளுநர் தானாகவே முன்வந்து பேட்டியளிப்பது, மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் விசாரணைக்கு உள்ளாக வேண்டிய ஆளுநரே தானாக முன்வந்து ஒரு விசாரணைக் குழுவை அமைப்பது உண்மைகளை மூடி மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையே. இது சம்பந்தமான பேட்டியின்போது, பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் அனைத்துப் பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் அவர் கன்னத்தைத் தட்டிய செயல் ஆளுநரது நடத்தையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

தமிழகத்தில் இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நீடிப்பது உண்மையை மூடிமறைக்கவே வழிகோலும். ஏற்கெனவே மாநில அரசு உரிமைகளைத் தட்டிப்பறித்து, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, ஆய்வு என்கிற பெயரில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திவருவது குறித்தான விமர்சனங்களை அவர் நிராகரித்தே வந்துள்ளார். எனவே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் இப்பிரச்னையில் ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய வேண்டுமெனவும் ஆளுநர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரம்பியுள்ள இப்பிரச்னையில் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், உயர்மட்டப் புலன் விசாரணைக்குழு அதிகாரிகளை நியமித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 25-ம் தேதி காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் அ.சௌந்தரராசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைப்பார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் மாநில, மாவட்டத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!