`ஊரும் சேரியும் ஒன்றானால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவைப்படாது! - போராட்டத்தில் ஒலித்த குரல்

தீண்டாமை வன்கொடுமை எதிர்ப்புச் சட்டத்தை அரசியல் சட்டத்தின் 9 வது அட்டவணையில் சேர்த்திடவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு எஸ்.சி, எஸ்.டி அலுவலர் நலச் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் திலகர், மாநிலத் தலைவர் முத்தாரப்பன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு முன்பு சேலம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே மேடை அமைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம் குறித்து பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் திலகர், ''தீண்டாமை வன்கொடுமை சட்டம் என்பது எங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. புரட்சியாளர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இந்த உரிமையின் மூலமே எங்கள் நிலை மாறி இருக்கிறது. அம்பேத்கர் வழங்கிய கல்வி, வேலைவாய்ப்பு மூலம் நாங்கள் அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்... என்ற கூற்றின் அடிப்படையிலேயே நாங்கள் இன்று ஒன்று சேர்ந்து போராட வந்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மத்திய அரசு இந்தச் சட்டம் நீர்த்துப் போகாமல் இருக்க அரசியல் சாசன சட்டத்தின் 9 வது அட்டவணையில் வன்கொடுமை சட்டத்தைச் சேர்க்க வேண்டும். நமது நாட்டில் ஊர்களும் சேரிகளும் பிரிந்து இருக்கின்றன. இது என்றைக்கு ஒன்றாக மாறுகிறதோ,அன்று வரை வன்கொடுமை சட்டமும் இடஒதுக்கீடும் அவசியம். ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் வன்கொடுமை சட்டமும் இடஒதுக்கீடும் தேவையில்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!