வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (21/04/2018)

கடைசி தொடர்பு:20:43 (21/04/2018)

தெருநாய்களின் தாகம் தீர்க்க களப்பணி - கோவை சிறுவர்களின் கோடை விடுமுறை!

கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஸ்பெஷல் கிளாஸ்களுக்குச் செல்வார்கள். அப்படி இல்லாவிடில் ஆண்ட்ராய்டு போனும் டி.வி-யும் கதியே என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள். ஆனால், கோவையைச் சேர்ந்த சில சிறுவர்கள், தெருநாய்களின் தாகத்தைத் தீர்க்கும் களப்பணியில் கலக்கி வருகிறார்கள்.

சிறுவர்கள் களப்பணி

கோவை, சுந்தராபுரம் பகுதி குறிச்சி ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த அந்தச் சிறுவர்களின் முழுநேரப் பணி இதுதான். பகுதி நேரமாகத்தான் கோடை விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். தெருநாய்களின் தாகம் தீர்க்க, தங்களது பகுதியில் தரைமட்டக் குழிதோண்டி, அதில் பாலித்தீன் பையில் குடிதண்ணீரை  நிரப்பி வருகின்றனர்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி கூறுகையில், “கோடை விடுமுறை தொடங்கிடுச்சு. இந்தப் பசங்க எல்லாம் வீட்லயே இருக்காங்க. எங்கயும் போறதில்லனு கேள்விப்பட்டேன். அப்பத்தான் இந்த ஐடியா தோணுச்சு. வெயில் காலத்துல நமக்கே இவ்வளவு தண்ணீர் தேவப்படறப்ப, வாயில்லா ஜீவன்கள் யார்கிட்டபோய் தண்ணீர் கேட்கும்? சாக்கடை தண்ணீரைக் குடிச்சிட்டுத்தான் அதுங்க கோடையைக் கடக்கும். எனவே, அவற்றின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க சிறுவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். எங்க பகுதியிலிருந்து 5 கி.மீ சுற்று வட்டாரத்துக்கு குழி தோண்டி, அதில் தண்ணீர் நிரப்பி வருகின்றோம்” என்றார்.

சிறுவர்கள் மாதவ் மற்றும் சஞ்சய் குழி தோண்ட, மற்றொரு சிறுவனான நிரஞ்சன் அதில் வேகவேகமாகப் பாலித்தீன் கவர்களை பரப்பினான். 6 வயது சுட்டி ரிஷாந்த், அதில் தண்ணீரை ஊற்றினான். சில நிமிடங்களிலேயே, அருகில் இருந்த ஒரு தெருநாய், அங்கு தண்ணீரைக் குடித்துவிட்டுச் சென்றது.

சிறுவர்கள் களப்பணி

“எல்லா பகுதிக்கும் போக முடியாது. அதனால, முதல்ல எங்க ஏரியாவுல இந்த முயற்சிய செய்யறோம். தினமும் இரண்டு வேளை தண்ணீர் கேனை சைக்கிள்ல வெச்சு கொண்டுபோய் கொட்டி வருகிறோம். நாய் மட்டுமல்ல ஆடுங்க மற்றும் மாடுங்களும்கூட தண்ணீரைக் குடிக்குது. எந்த உயிரையும் தண்ணீருக்காகத் தவிக்க விடக் கூடாது சார்” என்று சொல்லிவிட்டு, பக்கத்து தெருவில் களப்பணிக்கு ஓட்டம் பிடித்தது அந்தச் சிறுவர் படை.