`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை!

திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது நிர்மலாதேவி ஆடியோ.! – கொதிக்கும் துணைவேந்தர் செல்லதுரை.!

`நிர்மலா தேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் இதைச் செய்துள்ளனர்' என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் செல்லதுரை

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி பட்டமளிப்புவிழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை கலந்துகொண்டார். விழா முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் செல்லதுரை, ``நிர்மலா தேவி பேசிய அந்த இரண்டு ஆடியோக்களில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் உங்களுக்கே உண்மை என்னவென்று தெரியும். பல்கலைக்கழகத்தின் பெயரைக் களங்கப்படுத்துவது புரியும். சம்பந்தப்பட்ட கல்லூரி ஒரு தன்னாட்சி பெற்ற கல்லூரி, அதற்குத் தேர்வு நடத்துவதும், தேர்வுத்தாள் திருத்துவதும் அதே கல்லூரிதான். அப்படி இருக்க, பல்கலைக்கழகம் எப்படி அந்த மாணவிகளுக்கு மார்க் போட முடியும்?. மேலும், பிஹெச்.டி சீட் வாங்கித் தருகிறேன், ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுக்கிறேன் என்கிறார் நிர்மலா தேவி. 

அந்த 4 மாணவிகள் இப்போதுதான் இளங்கலை படித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து முதுகலை படிக்க வேண்டும். அதில் 55 சதவிகித மார்க் வாங்க வேண்டும். அதன்பிறகு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி, நுழைவுத்தேர்வு எழுதி மதிப்பெண் வாங்கிய பிறகுதான் பிஹெச்.டி படிக்க முடியும். மேலும், ஸ்காலர்ஷிப் கொடுப்பது பல்கலைக்கழகம் இல்லை. பல்கலைக்கழக மானியக்குழுதான் கொடுக்கும். அப்படி இருக்க, பல்கலைக்கழகத்துக்கும் அந்த ஆடியோவுக்கும் அதைப் பேசிய நிர்மலாதேவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

மோசடி செய்வதற்காகத் திட்டமிட்டு அந்த மாணவிகளைப் பேச வைத்துள்ளனர். அதற்குச் சட்டவிரோதமாகப் பல்கலைக்கழகத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நான் துணைவேந்தராகப் பதவியேற்றபோது பல்கலைக்கழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அனைத்தையும் சீர் செய்தேன். இது பல்கலைக்கழகத்தின் நலம் விரும்பாதவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனக்கு பல்வேறு சிக்கல்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பெரிய அளவில் அரசியலாக்குகிறார்கள். இல்லாத கெடுதல்களைச் செய்துவருகிறார்கள். அவர்களின் வேலையாக இது இருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது’’ என்றார் கொதிப்போடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!