காவிரி மேலாண்மை வாரியம் கோரி கல்லணையில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடைப்பயணம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கல்லணையில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பிரசார நடைபயணம் தொடங்கியது. 

மக்கள் அதிகாரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தி வருகிறது. திருச்சி தலைமை தபால் நிலையம்முற்றுகை, இந்திப் பிரச்சாரசபா முற்றுகை என இந்த அமைப்பின் சார்பில் நடந்த போராட்டங்களில் அனல் பறந்தது. இருபோராட்டங்களிலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மீது வழக்குகள் பதியப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாடகர் கோவன், நிர்வாகிகள் ராஜா, சரவணன், லதா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி கல்லணைமுதல் பூம்புகார் வரை, `காவிரி உரிமை, குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது’ எனும் பெயரில் பிரசார நடைப்பயணம் மேற்கொள்ளக் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீஸார் இந்தப் பிரசார நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தனர். அதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறப்பட்டது. அதன்படி மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரசாரபயணம், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, திருவையாறு சி.பி.எம். விவசாய சங்க வட்டாரச் செயலாளர் ராமலிங்கம் மற்றும் விவசாயி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர் ராஜூ கொடியசைத்து துவங்கிவைத்தார். மேலும் மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், கணேசன் என ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

மக்கள் அதிகாரம்

தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர், அமைப்பின் கொடியை தாங்கியபடி, மத்திய மாநிலஅரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கியபடி பயணத்தை துவங்கினர். இந்தப் பயணத்தில் சிறுவர்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளதுடன், மேளதாளம் முழங்க, விழிப்புணர்வு பாடல்கள் இசைத்தபடி நடைபயணம் செல்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!