`செவிலியர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!’ - கேரளாவில் சுகாதாரப் பணிகள் முடங்கும் அபாயம்

கேரளாவில் வரும் 24-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் மருத்துவப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செவிலியர்கள்

கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸுகள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கேரளா முழுவதும் உள்ள செவிலியர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

மாநில அரசும் தொழிலாளர் நலத்துறையும் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அப்போதைய போராட்டம் முடிவுக்கு வந்தது. செவிலியர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து விரைவில் அவர்கள் விரும்பும் வகையில்.அடிப்படைச் சம்பளத்தை அரசு நிர்ணயிக்கும் என உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது.

ஆனால், கடந்த 8 மாத காலமாக நர்ஸுகளின் கோரிக்கைகை நிறைவேற்ற கேரள மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த செவிலியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். ஒருங்கிணைந்த நர்ஸுகள்.கூட்டமைப்பு என்கிற அமைப்பின் சார்பாக இந்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பங்கேற்ற செவிலியர் சங்கங்களின் பிரதிநிதிகள், தங்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. 

அதனால் நர்ஸுகள் வரும் 24-ம் தேதி முதல்.கேரளா முழுவதும் காலவரையறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டிவந்த போதிலும், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், வரும் 24-ம் தேதி செர்தாலா மருத்துவமனை முன்பாக பேரணி தொடங்குகிறது. அந்தப் பேரணி பல்வேறு நகரங்களின் வழியாக 8 நாட்கள் பயணித்து, 168 கி.மீ தூரத்தைக் கடந்து திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பாகச் சென்றடைந்து, அங்கு காலவரையற்ற போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் சுகாதாரப் பணிகள் முடங்கும் ஆபத்து இருப்பதால் கேரள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!