வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (22/04/2018)

கடைசி தொடர்பு:04:15 (22/04/2018)

`சக்கரையாக பேசும் எம்.பி-க்கள், தொகுதிக்கு நிதி கேட்டால் ஓடி விடுகிறார்கள்' - அமைச்சர் மணிகண்டன்

''சக்கரையாக பேசும் மேலவை எம்.பி-க்கள் தொகுதிக்கு நிதி கேட்டால் நழுவி விடுகின்றனர்'' என அமைச்சர் மணிகண்டன் சொந்த கட்சி எம்.பி-க்கள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

`சக்கரையாக பேசும் மேலவை எம்.பி-க்கள் தொகுதிக்கு நிதி கேட்டால் நழுவி விடுகின்றனர்' என அமைச்சர் மணிகண்டன் சொந்த கட்சி எம்.பி-க்கள் குறித்து பேசிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மணிகண்டன்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிராமத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி துவக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் நடராஜன், தொகுதி எம்.பி அன்வர் ராஜா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் பள்ளிக்கான கல்வெட்டினை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  ``'மண்ணைத் தோண்ட தோண்டத் தண்ணீர் ஊருவதைப் போல புத்தகங்களைப் படிக்க படிக்கத்தான் அறிவு வளரும். இந்தப் பள்ளியிலே படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். 

எனவே மாணவிகள் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய பொறுப்புமிக்கவர்கள். ஒழுக்கமாக வாழக் கூடியவர்கள். ஒருவருக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை வள்ளுவர் தனது திருக்குறளில் வலியுறுத்தியுள்ளார். அதனையே இஸ்லாத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆண்களும், பெண்களும் தன்னுடைய வாழ்க்கை முறைகளை ஒழுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். புதுமடம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் கட்ட எனது தொகுதி நிதியில் இருந்து எந்தவித கமிஷனோ, லஞ்சமோ இல்லாமல் ரூ.25 லட்சம் நிதி கொடுத்திருக்கிறேன்.

அம்மாபட்டிணம் பகுதியில் உள்ள பழைய பாலத்தினை பார்வையிட்டு அதனைப் புதிதாக கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் என்னிடம் சக்கரையாக பேசுவார். அமைச்சர் நீங்கள் அப்படி, இப்படி எனப் பேசுவார். அவரிடம் உங்கள் தொகுதி நிதியில் இருந்து எனது மாவட்டத்திற்கு நிதி தாருங்கள் என கேட்டால் அப்படியே திரும்பி ஓடி விடுவார். 'நிதியை கொடுத்துட்டண்ணே. நிதி முடிஞ்சிருச்சுண்ணே' என்று சொல்லி விடுவார். ஏழைகளின் சிரமங்களை போக்க ஒரு அமைச்சர் என பாராமல் கூட மாநிலங்களவை உறுப்பினரிடம் கேட்டால் இப்படிச் சொல்வார். ஏப்ரலில் நிதி தருவதாக சொல்வார். ஆனால் தரமாட்டார். 

தற்போது என்னிடம் பாசமாக உள்ள ஒரு எம்.பி-யிடம் நிதி கேட்டிருக்கிறேன். அவரும் தருவதாக சொல்லியிருக்கிறார். அதற்கான கடிதம் கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் செய்ய முடியும் என்றால் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் செய்கிறாரோ இல்லையோ முதல்வரிடம் இது குறித்து முறையிட்டுள்ளேன். எனவே கட்டாயம் அந்தப் பாலத்தினை நிச்சம் கட்டி தருவேன்'' என்றார். அரசு விழா ஒன்றில் தனது கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரைப் பற்றி குறையாக அமைச்சர் மணிகண்டன் பேசியதை கேட்ட கட்சிக்காரர்களும், விழாவில் பங்கேற்றவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.