”மக்களின் சம்மதத்துடனே மணல் குவாரி அமைகப்படும்” அரசு கொறடா ராஜேந்திரன்

கொள்ளிடத்தைக்  காப்பாற்றுங்கள் என்று அனைத்துக்கட்சியினர்  சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய, அடுத்த நாளே மக்களின் சம்மதத்துடனே  மணல் குவாரி அமைக்கப்படும் என அரசு கொறடா பேசியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                                        அரசு கொறடா ராஜேந்திரன்

அரியலூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசை வலியுறுத்தி  அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட அதிமுக  சார்பில் வரும் 25 -ம் தேதி அரியலூரில்  நடைபெறயுள்ள பொதுக் கூட்டம் குறித்த கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசனை  கூட்டம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜேந்திரன், "திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாங்கள் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுகிறோம் என்ற மாயதோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் உண்மையில் காவிரி மேலாண்மைக்காகப் போராடுவது அதிமுக மட்டுமே. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அப்போது காவிரிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது போராடுவது கண்டனத்திற்குரியது" என்றார். 

                                    மணல் குவாரி

பின்னர் செய்தியாளர்களிடம், "அம்மாவிற்கு அடுத்தபடியாக அண்ணன் எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேர்மையான முறையில் மணல் குவாரியை அரசே  நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுமை தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ள சான்றுகளை பெற்றே பிறகே மணல் குவாரிகள் அமைக்கப்படுகிறது. தமிழக அரசு தன்னிச்சையாக மணல் குவாரி அமைப்பதில்லை" என்றார். அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து அந்தப் பகுதி பொது மக்களின் கருத்துகளை கேட்டு அது குறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும். மேலும் மக்களின் சம்மதத்துடனே மணல் குவாரி அமைக்கப்படும் எனக் கூறினார்.

கொள்ளிடத்தில் மணல்குவாரி அமைத்தால் இந்தப் பகுதியே பாலைவனமாக மாறிவிடும் என்று நாள்தோறும் பல போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கொறடா ராஜேந்திரன் மக்களிடம் கருத்து கேட்டு மணல் குவாரி அமைக்கப்படும் என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் போராட்டகாரர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!