வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (22/04/2018)

கடைசி தொடர்பு:12:12 (22/04/2018)

கள்ளழகர் வைகையில் இறங்கும் முன் ஏ.வி பாலம் சரி செய்யப்படுமா? -சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!

திருவிழா நடைபெறுவதை காரணமாவது இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும்

சேதமடைந்த பாலம்

சித்திரைத்  திருவிழா கடந்த 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் எதிர்சேவை நிகழ்ச்சியைக்  காண ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆனால் அழகர் ஆற்றில் இறங்கும் வைகை ஆறோ பெருமைப்படுத்தி  சொல்லும் அளவிற்கு இல்லாதபடி பாழடைந்து கிடக்கிறது. அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியில் உள்ள பாலங்களோ மிகவும் சேதம் அடைந்து உள்ளது. பாலத்தில் மரக்கன்றுகள் முளைத்து மிகவும் மோசமான நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

சேதமடைந்த பாலம்

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை சார்ந்த அசோக் கூறுகையில் "ஏ.வி பாலம் என்று சொல்லக்கூடிய மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலம் கோரிப்பாளையம்  பகுதியில் வைகை ஆற்றைக்  கடந்து செல்ல ஆங்கிலையரின் ஆட்சிக்காலத்தில்  கட்டப்பட்டது . 129 ஆண்டுகளைக்  கடந்து கம்பீர தோற்றத்துடன்  இருந்த இந்தப்  பாலம் ஒருவழிப்பாதையாகக்  கனரக வாகனங்கள் செல்லும் வகையில், மக்கள் பயன்பாட்டில் தற்போதும் உள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் வரலாற்று நிகழ்வும் இந்தப்  பாலம்  அருகிலே கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும்.


 

இப்படிப்பட்ட இப்பாலத்தில் ஆங்காங்கே அரசமரக்கன்றுகள் வளர்ந்தும், பாலத்தின் 7 -வது வளைவின் அடிப்பகுதியில் சுவர்கள்  உடைந்து  செங்கற்கள்  சேதம் அடைந்துள்ளன. மேலும் நீர் செல்லும் அடித்தளம்  சேதமடைந்தும் குண்டும் குழியுமாகக்   காணப்படுகின்றன இது தொடர்ந்தால் வரலாற்றுச்  சிறப்புமிக்க பாலத்தின் பொழிவும் ஆயுளும் குறைந்துவிடும். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களும், மதுரை கார்பரேசன் ஆணையர் அவர்களும் இதனைக்  கவனத்தில் கொண்டு இந்தப்  பாலத்தை விரைவாகச்  சரிசெய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனத்  தெரிவித்தார். திருவிழா நடைபெறுவதைக்  காரணமாக வைத்தாவது இந்தப்  பாலத்தை உடனடியாக சீரமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்