வெளியிடப்பட்ட நேரம்: 07:42 (22/04/2018)

கடைசி தொடர்பு:12:43 (23/04/2018)

"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை!" வேல்விழி பெற்றோர் சந்தேகம்

உடற்கூறு ஆய்வுக்காக வேல்விழியின் நைந்து போன உடல் வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்துள்ள வேல்விழியின் பெற்றோர், உடற்கூறு ஆய்வுக்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், உடற்கூறு ஆய்வு நடப்பதில் தொடர்ந்து  சிக்கல் நீடிக்கிறது.  "வேல்விழி பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவர்கள் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. எங்கள் மகளை, அஜீத்குமார் ஒருவரே கொலை செய்திருப்பார் என்பதையும், நகைக்காக மட்டுமே இந்தக் கொலை நடந்திருப்பதாகச் சொல்வதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்" என்கின்றனர் வேல்விழியின் பெற்றோர். 

வேல்விழி கொலை


கொலை, கொள்ளை, ஆள் மாயம், கடத்தல் போன்ற சம்பவங்களில் சில புகார்களின் மீது போலீசார் எடுக்கும்  நடவடிக்கையை ஆராய்ந்தால், அதிர்ச்சிதான் விடையாகக் கிடைக்கிறது. உரிய நடவடிக்கையை உடனே மேற்கொண்டாலே பல குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுவிடும். குறிப்பாகக் 'குழந்தைகள் மற்றும் பெண்கள் மாயம்' என்ற புகார்களின் மீது துரித நடவடிக்கைக்கான அவசியத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிந்துகொள்ள முடியும். சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில், 'இளம் பெண், வேல்விழி  மாயம்' என்று கடந்த 9 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.  18 ஆம் தேதி, வேல்விழியின் சடலம்தான் அழுகிய நிலையில் மீட்கப் பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த வேல்விழி, சென்னை சூளைமேடு, வீரபாண்டி தெருவில் தங்கியிருந்து 'நர்சிங்' படித்து வந்திருக்கிறார். அன்றாடம் காலையும், மாலையும் மகளிடம் போனில் பேசிவிடும் தந்தை ராஜேந்திரன், கடந்த 6 ஆம் தேதி பேச முயன்றபோது, வேல்விழியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இரண்டு நாள் தேடலுக்குப்பிறகு கடந்த 9-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஏற்கெனவே, 'வாதியால் தாமதம்' என்று புகாரைப் பெற்றுக்கொண்ட சூளைமேடு போலீசார், அடுத்த பத்துநாள்களில் மேற்கொண்ட புலனாய்வுதான் என்ன?


வேல்விழிபுகார் வாங்குவதில் சிக்கல்

பெண் மாயம் என்று புகாரைக் கொடுக்கப் போனால், "உறவினர் வீடுகளில் தேடிப் பாருங்கள்; உங்கள் பெண்ணின் தோழிகளிடம் கேளுங்கள்; யாரிடம் அதிக நேரம் போனில் பேசுவார் என்று விசாரித்துச் சொல்லுங்கள். காதல் தொடர்பு ஏதாவது இருக்கிறதா என்று அவர் தோழிகளிடம் கேளுங்கள்; திருமணத்துக்கு நீங்கள் ஏதேனும் தடை போட்டீர்களா, வீட்டில் ஏதாவது சண்டை போட்டீர்களா என்று ஞாபகப்படுத்திச் சொல்லுங்கள்" என்பதுதான் பெரும்பாலான காவல் நிலையங்களின் வழிகாட்டுதலாக இருக்கிறது. தரம் கருதியே நாம் ஒழுங்கான வார்த்தைகளில் போலீசாரின் வழிகாட்டுதலைப் போட்டுள்ளோம். உண்மையில் அவர்கள் பேசும் தொனியே வேறு ரகம்தான். கடைசியாக, "காலகாலத்தில் உங்கள் பெண்ணுக்குத்  திருமணம் செய்து வைத்திருந்தால், இப்படி அழும் நிலைமை வந்திருக்குமா ?" என்றக் கேள்வியைக் கேட்காமல் போலீசார் விடுவதில்லை.


கைதான அஜீத்குமார்காவல் எல்லை பஞ்சாயத்து...

காவல்நிலையத்தில் இத்தனை சோதனைகளுக்கு அப்பாலும் இன்னொரு சோதனை இருக்கிறது... அதுதான் எல்லை (லிமிட்) சோதனை. "சார், வீட்டிலிருந்து  உங்கள் மகள் காணாமல் போனதாகச் சொல்கிறீர்கள். வீட்டிலிருந்து அவர் அலுவலகம் போகும் வழியில் இரண்டு இடங்களில் நின்று யாருக்கோ போன் செய்திருக்கிறார். அதன் பின்னர்தான் காணாமல் போயுள்ளார். அவர் போன் செய்த முதல் இடம் ----------- போலீஸ் லிமிட்டில் வருகிறது. இரண்டாவது இடம் ---------- போலீஸ் லிமிட்டில் வருகிறது. ஆகவே, இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்க முடியாது.  அந்த இரண்டு காவல் நிலையத்தில் ஏதாவது ஒன்றில்தான் விசாரிக்க முடியும்" என்று சுற்றலில் விடும் அநியாயங்களும் நடக்காமல் இல்லை. 'காவல் நிலைய எல்லையைக் கணக்கில் கொள்ளாமல், பாதிக்கப்பட்ட நபரின் அவசர சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தக் காவல் நிலையத்திலும் புகாரை வாங்கலாம்' என்று சென்னை போலீஸ் கமிஷனரும், மாநில போலீஸ் டி.ஜி.பி-யும் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் செய்தும் இந்த நிலை தொடர்கிறது.


போலீஸ் என்ன சொல்கிறது ?

சூளைமேடு போலீஸார், "வேல்விழியின் தோழியான மகாலட்சுமியின் காதல் கணவன்தான், வேல்விழியின் நகைகளுக்காக அவரைக் கொலை செய்தார். அந்த நகைகளை விற்று மனைவி மகாலட்சுமி பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார். நகைகளைக் கைப்பற்றி விட்டோம். வேல்விழியின் உடலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒளித்து வைத்துள்ளதாக வேல்முருகன் ஒப்புக்கொண்டுவிட்டார். வேல்விழி உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகிறோம்" என்று  கொலைக்கான காரணத்தைச் சொல்கிறார்கள். 


கொலையில் அடுத்த சந்தேகம் !

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வேல்விழியின் நைந்து போன உடல் வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்துள்ள வேல்விழியின் பெற்றோர், உடற்கூறு ஆய்வுக்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், உடற்கூறு ஆய்வு நடப்பதில் தொடர்ந்து  சிக்கல் நீடிக்கிறது.  "வேல்விழி பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவர்கள் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. எங்கள் மகளை, அஜீத்குமார் ஒருவரே கொலை செய்திருப்பார் என்பதையும், நகைக்காக மட்டுமே இந்தக் கொலை நடந்திருப்பதாகச் சொல்வதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்" என்கின்றனர் வேல்விழியின் பெற்றோர். 

கல்லூரி நிர்வாகம் மறுப்பு

வேல்விழியின் பெற்றோர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை,  கல்லூரி நிர்வாகம் (விருத்தாசலம், சென்னை கிளை) மறுத்துள்ளது. "நர்ஸிங் மாணவிகள் நான்கு பேரை  பயிற்சிக்காக அமைந்தகரையில் உள்ள ஒரு கிளீனிக்குக்கு அண்மையில் நாங்கள் அனுப்பி வைத்தோம். அங்கே உணவு, தங்கும் இடம் அனைத்தும் இலவசம் என்று சொல்லி, பின்னர் அங்கே  கட்டணம் வசூலித்ததால், நர்ஸிங் மாணவிகள் நான்கு பேரும் வேறு இடத்துக்கு பயிற்சிக்குப் போய்விட்டனர். இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் வருத்தப்பட்டுச் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால், இந்தக் காரணங்களுக்காக எங்கள் மீது இவ்வளவு பெரிய பழியைப் போடக்கூடாது..." என்கிறது. வேல்விழி கொலையின் பின்னணியில் மறைக்கப் பட்ட ரகசியம் இருக்கிறது. அதை போலீஸார்தான்  உடைத்து வீச வேண்டும். அப்போதுதான் 19 வயது மகளை இழந்துத் தவிக்கும்  பெற்றோருக்கு சில வாரங்கள் கழித்தாவது நிம்மதியான உறக்கம் வரும்...!
 


 


டிரெண்டிங் @ விகடன்