வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (22/04/2018)

கடைசி தொடர்பு:13:33 (22/04/2018)

`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் 3வது நாளாக வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வைகோ மீது பா.ஜ.க.,வினர் கல் வீசினர். இதில் பா.ஜ.க., மற்றும் ம.தி.மு.க., வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல் நாளில் கோவில்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய அன்றே பா.ஜ.க.,வினர் வைகோவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டினர். பின், குளத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவரை நோக்கி மதுபாட்டில்கள் வீசப்பட்டது. பாட்டில்கள், வைகோ மீது படாமல் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்தது. இரண்டாவது நாள் பிரச்சாரத்தில் பெரிய அளவிலான எதிர்ப்புகள் ஏதுமில்லை. 

வைகோ

மூன்றாம் நாள் பிரச்சாரத்தை நேற்று (21.04.18) மாலை  6 மணிக்கு  செய்துங்கநல்லூர் பகுதியில்  துவக்கினார். தொடர்ந்து, ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி மற்றும் உடன்குடி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். கடைசியாக உடன்குடி,   சத்தியமூர்த்தி பஜாருக்கு இரவு 9.45 மணி அளவில் வைகோ வந்தார். அங்கு திரண்டிருந்த பா.ஜ.க.,வினர் கருப்புக்கொடி, கருப்பு பலூன் காட்டி ”வைகோ ஒழிக” என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வாகனத்தை  முற்றுகையிடுவதுபோல் பா.ஜ.க.,வினர் நடந்து வந்தனர். 

வைகோ

இதனால் ம.தி.மு.க.,வினருக்கும், பா.ஜ.க.,வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வைகோவின் பிரச்சார வாகனம் மீது கற்கள் வீசப்பட்டன. ஆனால், வைகோ மீது கற்கள் படவில்லை. பின், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் வாகனத்தில் நின்றபடியே பேசிய வைகோ, “ எனக்கு எதிராகப் பா.ஜ.க.,வினர் கருப்புக்கொடி காட்ட இருப்பதாக தகவல் அறிந்துதான் வந்தேன். கருப்புக்கொடி காட்டுவதும் ஜனநாயக உரிமை. காட்டிவிட்டுப் போகட்டும். இது தேர்தல் பிரச்சாரம் அல்ல. மக்கள் எதிர்த்துப் போராடி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றுதான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.அப்படியென்றால், பா.ஜ.க.,வினர் இந்த ஆலை வேண்டும் என்கிறார்களா?  இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.” என்றார்.

இந்தக் கல்வீச்சில்  ம.தி.மு.க,வினர் 3 பேர் காயம் அடைந்தனர். சட்டவிரோதமாக கூடி கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க.,வினர் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ம.தி.மு.க.,வினர் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை திருசெந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க