பெட்ரோல், டீசல் விலை 5 ஆண்டுக்குப் பின் கடும் உயர்வு!

பெட்ரோல் பங்க்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில், அவற்றின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

மாதம் இரு முறை அதாவது 15ம் தேதி மற்றும் மாத இறுதி நாளில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை மத்திய பி.ஜே.பி. அரசு, கடந்த ஜூன் மாதம் மாற்றி, அன்றாடம் பெட்ரோல், டீசலின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அப்போது முதல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி, இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.50 ஆகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய நாள் விலையைக் காட்டிலும் தலா 19 காசுகள் உயர்வாகும். இதே போல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 77.10 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ 69.15 ஆகவும் அதிகரித்துள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத விலை உயர்வாகும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தினந்தோறும் 10 காசு, 20 காசு என்று அதிகரித்து கடந்த ஆறு மாதத்தில் சுமார் 10 ரூபாய் வரை பெட்ரோல், டீசலின் விலைகள் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இதே வேகத்தில் விலை உயர்த்தப்படுமானால், அடுத்த சில தினங்களில் ஒரு லிட்டர் விலை 100 ரூபாயைத் தாண்டிவிடக் கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பெட்ரோல்பெட்ரோல், டீசலின் விலை ஒருபுறம் உயர்வதால், லாரி வாடகை மற்றும் போக்குவரத்துக்கான தொகை அதிகரித்து, விலைவாசி உயர்வும் கடுமையாக ஏற்படும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஏற்கெனவே, நேற்று லிட்டருக்கு பெட்ரோல் விலை 13 காசுகளும், டீசலின் விலை 15 காசுகளும் உயர்த்தப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை தற்போதுதான் இந்தளவைத் தொட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசை கேட்டுக் கொண்டன. ஆனால், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிடவில்லை. 

தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016 நவம்பர் வரையிலான காலத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த நிலையில், அவற்றின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 9 முறை அதிகரித்தது நினைவிருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!