` வைகோ மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! ' - கடுகடுத்த கடம்பூர் ராஜூ | minister kadambur raju condemns attack over vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (22/04/2018)

கடைசி தொடர்பு:17:25 (22/04/2018)

` வைகோ மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! ' - கடுகடுத்த கடம்பூர் ராஜூ

ஆளுநர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். 

கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சியில் ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தினை நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலமாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்தத் துணை மின் நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றிப் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ``புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது உறுதியாக அரசு நடவடிக்கை எடுக்கும். பெண்கள் மீது இழிவாகப் பேசுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது மூலமாக மற்றவர்கள் இனிமேல் யாரும் இது போன்று பேசக்கூடாது என்ற நிலையை அரசு ஏற்படுத்தும். ஆளுநர் மீது குற்றச்சாட்டு கூறி விட்டு, ஆளுநரிடமே மனு அளிக்கும் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தமிழகத்தில் உள்ளனர். 

அரசை மீறி ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். கறுப்புக்கொடியும் காட்டுகின்றனர். ஆனால், முதல்வரிடம் மனு அளிக்காமல், ஆளுநரிடம் மனு அளிப்பது ஏன்? ஆளுநரிடம் மனு அளிப்பதில் இருந்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. உடன்குடியில் வைகோ மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க-வினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. மோடி பற்றி வைகோ தெரிவித்த கருத்திற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டம், சட்டமன்றத்தில் தீர்மானம், தமிழகத்திற்கு வரும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தல் மட்டுமின்றி, அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம், தற்போது பொதுக்கூட்டங்கள் எனத் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்பது தன் எங்களின் நிலைப்பாடு" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க