வெளியிடப்பட்ட நேரம்: 21:29 (22/04/2018)

கடைசி தொடர்பு:21:37 (22/04/2018)

`ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' - அரசை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் உண்ணாவிரதம்

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் இன்று பல்லடம் பேருந்து நிலையத்தின் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பி.ஏ.பி திட்டத்தின் மூலம் பயன்பெறக்கூடிய ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய விவசாயிகள்,  ``காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது பரம்பிக்குளம் - ஆழியாறு (பி.ஏ.பி) திட்டம். இத்திட்டத்தின் மூலம் பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சோலையாறு, உப்பாறு, மேல் நீராறு, கீழ் நீராறு, தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டன.

ஆனால் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஆனைமலையாறு - நல்லாறு அணைக் கட்டும் திட்டம் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஆட்சியாளர்கள் கடந்த 35 ஆண்டுகளாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவிட்டதால், இன்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் எதிர்காலம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசின் ஆண்டு வருமானம் 400 கோடியாக இருந்த காலத்திலேயே பி.ஏ.பி திட்டத்தைக் காமராஜர் செயல்படுத்தினார். ஆனால் இன்று 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றத் தயங்குகிறது. மானாவாரிப் பயிர்களான பருத்தி மற்றும் தானியப் பயிர்களை உற்பத்தி செய்து தற்சார்பு விவசாயம் மேற்கொண்டிருந்த இப்பகுதி விவசாயிகளை, தென்னை சாகுபடிக்கு மாற்றிய பங்கு அரசுக்கு அதிகமாக இருக்கிறது.

ஆனால் இன்று தென்னை விவசாயத்துக்கு முறையாகத் தண்ணீர் கிடைக்காமல், கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வளர்க்கப்பட்ட கோடிக்கணக்கான தென்னை மரங்களில் சுமார் 50% மரங்கள் முற்றிலுமாக காய்ந்துபோய்விட்டன. இனி மீதமுள்ள மரங்களையாவது காப்பாற்றி, இப்பகுதி விவசாயத்தைப் பாதுகாக்கவும், குடிநீருக்காக கிராமப் பஞ்சாயத்துகள் செலவிடும் பல கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தவும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே 2 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்" என்றனர்.