செங்கல்பட்டு அருகே கல்வீச்சில் எஸ்.பி. மண்டை உடைப்பு - 11 பேர் மீது வழக்கு பதிவு..!

செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் ஒன்று அரசுப் பேருந்துடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட அஞ்சூர் கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். 

செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாவண்யா என்ற பெண்ணும், அவரது கணவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்தக் காயங்களுடன் அவரது கணவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து அங்கு திரண்ட அஞ்சூர் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினார்கள். சனிக்கிழமை என்பதால் தென்மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் செல்லும். இதனால் அதிக அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மறைமலைநகர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடைவதாக இல்லை. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் செய்துவந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் காவல்துறையினர் மீது கல்வீச்சு நடத்தினர். இதில் எஸ்.பி. சந்தோஷ் தலையிலும் ஒரு கல் வேகமாக வந்து விழுந்தது. அவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர். இதைத் தொடர்ந்து இன்று அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த 11 பேர் மீது பொது சொத்துக்குச் சேதம் விளைவித்தது, கொலை முயற்சி என ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!