குழந்தை வளர்ப்பதைப்போல் மரங்களை வளர்க்கும் ஆச்சர்ய கிராமம்! கரூரில் அசத்தில் முயற்சி

கரூர் மாவட்டம்,  கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில்   இருக்கும் இந்தக் கிராமம் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருக்கிறது. அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தில் மிகப்பெரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி ஜோராக நடக்கிறது.

இந்தக் கிராம மக்கள் மரம் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்திய காரணமாக இந்தக் கிராமம் கரூர் மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருதை கடந்த ஆண்டு பெற்றது. அதனால், இந்த ஒன்றியம் முழுவதையும் பசுமையாக்க நினைத்த கரூர் மாவட்ட நிர்வாகம், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியை இந்தக் கிராம ஊராட்சியிடம் கொடுத்தது. அவர்களும் இயற்கையாக இந்த ஊர் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி இங்கே பல் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை பதியம் போட்டு உருவாக்கி பராமரித்து வருகிறார்கள். அவற்றை அவ்வப்போது கடவூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நட அனுப்பியும் வைக்கிறார்கள்.

நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்களை வைத்து சிறப்பாக மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள். ஏற்கெனவே கரூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம். அதிலும் இந்த வருடம் கோடை தொடங்கியுள்ள நிலையில், கடந்த முப்பது வருடங்களில் அடிக்காத வெயில் அடித்து, கொளுத்தி எடுக்கிறது. ஆனால், இந்த வறட்சியிலும் மக்கள் அந்த மரக்கன்றுகளை பசுமையாக வளர்க்கிறார்கள். 


 

இதுபற்றி, தெற்கு அய்யம்பாளையம் கிராம நிர்வாக தரப்பில் பேசினோம், 'ஏற்கெனவே எங்க ஊராட்சியை நாங்க பசுமையாக மாத்தி வச்சுருக்கோம். அதனால்தான், மாவட்ட நிர்வாகம் எங்க கிராமத்துல இந்த ஒன்றியத்துக்குமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் வாய்ப்பை கொடுத்திருக்காங்க. இந்த ஒன்றியமே எங்க முயற்சியால பசுமையாக மாறப் போகுதுன்னு நினைச்சாலே, ஆனந்தமா இருக்கு. எங்க ஊராட்சியில் இன்னும் அதிக மரங்கள் வளர்த்து, இந்தியாவிலேயே இயற்கையைப் பேணிக் காக்கும் ஊர்ன்னு பேர் வாங்கணும். அதற்காக, இந்த ஊர் மக்கள் மரம் வளர்ப்பதை தங்கள் குழந்தைகளை வளர்ப்பதைப்போல அக்கறையாக வளர்க்கிறார்கள்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!