குப்பைகளுக்கு நடுவே கிடந்த முதியவர்… காப்பாற்றிய சமூக ஆர்வலர்கள்

தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடம் பிடிக்க திருச்சி மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி பிளாக்கிங் எனும் பெயரில் பொதுமக்கள் நடைப்பயிற்சியின் போது தாங்கள் கடந்து செல்லும் வழியில் குப்பைகள் கிடந்தால் அதனைச் சேகரித்து குப்பையில்லா மாநகரமாக உருவாக்கும் திட்டம் துவங்கப்பட்டது.

குப்பை

வெளிநாடுகளில் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் மேற்கொள்பவர்கள், தெருக்களில் இருக்கும் குப்பைகளை பை ஒன்றில் சேகரித்து, அதைக் கொண்டு குப்பைத் தொட்டியில் போடுவார்கள். இந்த பிளாகிங் முறையை திருச்சி மாநகராட்சி முதல்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக, சமூக வலைதளங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 3000 பேர் ஆர்வத்தோடு பதிவு செய்தார்கள்.

உலக பூமி தினமான இன்று திருச்சி மாம்பழச்சாலை, காவிரிகரையில் மாவட்ட கலெக்டர் ராசாமணி, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் ஆகியோர் இந்தத் திட்டத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி காவிரிகரையில் உள்ள குப்பைகளை அகற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்கள். அதன்படி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பை மற்றும் கையுறை வழங்கப்பட்டது. இதேபோல் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் அந்த அந்த வார்டு பகுதிகளிலும் நடைப்பயிற்சியின்போது சாலைகளில் உள்ள குப்பைகள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, எம்பி குமார் ஆகியோர் பார்வையிட்டு குப்பைகளை அகற்றினார்கள். மேலும், திருச்சி காவல்துறை துணை ஆணையர் சக்திகணேஷ், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், பண்பலை தொகுப்பாளர் சகா, மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் புண்ணியமூர்த்தி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், "இந்தத் திட்டத்தின் நோக்கம் தூய்மையான மாநகரமாக உருவாக்கச் சாலைகளிலோ, வீடுகளுக்கு அருகிலேயே குப்பையைக் கொட்டாமல் மாநகரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வை மக்கள் தாங்களாகவே உணரச் செய்வதே. பொதுமக்கள் நடைப்பயிற்சியின்போது தாங்கள் கடந்து செல்லும் வழியில் உள்ள பிளாஸ்டிக், குப்பைகளை எடுத்து பையில் சேகரித்து குப்பைத்தொட்டி அல்லது குப்பைகள்வாங்க வீடுதேடிவரும் வாகனத்தில் வழங்க வேண்டும். இத்திட்டம் ஒரு தொடர் நிகழ்வாகவும் பொதுமக்களின் இயக்கமாக உருவாக வேண்டும். இத்திட்டத்தில் நகர்நலசங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து அவர்களுக்கு உரிய அந்த அந்தப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டால், இத்திட்டத்தின் மூலம் தூய்மையான மாநகரத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்கள். மாநகராட்சிப் பகுதியில் தினந்தோறும் 30 டன் பிளாஸ்டிக் பிரித்து பொதுமக்கள் வழங்குகிறார்கள். மேலும், இந்தப் பணியில் இணைய முகநூலில் TRICHY PLOGGING திருச்சி என்ற குழுவை ஆரம்பித்துள்ளோம் இதில் 10,000 பேர் பதிவுசெய்து கலந்துகொண்டார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் மகிழ்ச்சியோடு குப்பைகளை சேகரித்தனர். அப்படிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டிருக்கும்போது, யுகா பெண்கள் அமைப்பின் தலைவி அல்லிராணி, திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அனிதா, வென்சி, கலைச்செல்வி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், காவிரி பாலத்துக்கு அடியில் குப்பைகளோடு குப்பையாய் ஒரு முதியவர் படுத்துக் கிடப்பதைக் கண்டனர். பதறிப்போய் அவரின் அருகில் சென்றபோது, பல நாள்கள் பட்டினிக் கிடந்த உடல், கண்கள் மட்டும் துடித்தபடி இருக்க, உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

சமூகர் ஆர்வலர்கள்

இதுகுறித்து அல்லிராணி நம்மிடம், குப்பைகளுக்கு நடுவே அந்த முதியவரைப் பார்த்ததும் பதறிப்போனோம். கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக அவர் அங்குக் கிடப்பதாக அந்தப் பகுதியில் ஆடுமாடு மேய்த்தவர்கள் கூறினார்கள். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். இப்போது நலமாக உள்ளார். அவர் பெயர் செல்வராஜ் என்றும், சொந்த ஊர் விருத்தாசலம் எனத் தெரியவந்துள்ளது. சமையல் வேலை செய்துவரும் அவர், வேலைக்காக திருச்சி வந்துள்ளார். இங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே சமையல் வேலை செய்ய முடியாத சூழலில் இப்படி பட்டினியாக கிடந்துள்ளார். நல்ல வேளைக் காப்பாற்றிவிட்டோம். மருத்துவர்களின் கவனிப்பால் இப்போது நலமாக உள்ளார்” என்றவரின் வார்த்தைகளில் அவ்வளவு ஆனந்தம்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!