உய்யங்கொண்டான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் மாணவர்கள்..!

ஒருகாலத்தில் ஆறாகப் பாய்ந்தோடிய உய்யங்கொண்டான் ஆறு, கடந்த பத்தாண்டில் கழிவு நீர் கலப்பதால் பாழாகிப்போனது. அந்த ஆற்றைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் சுத்தம்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்கள்.

மாணவர்கள்

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மேட்டூர் அணை கல்லணை இடையில் காவிரியிலிருந்து பிரிந்தது உய்யங்கொண்டான் ஆறு. இந்த ஆறு ஸ்ரீரங்கம் வட்டத்தில் பெட்டவாய்த்தலை, எஸ்.புதுக்கோட்டை, காமநாயக்கன் பாளையம், சிறுகமணி, பெருகமணி, பழையூர், ஆனைமலை, திருப்பராய்த்துறை, எலமனூர், கொடியாலம், புலிவலம், குழுமணி, பேரூர், மேக்குடி, கோப்பு, எட்டரை, முள்ளிக்கரும்பூர், வயலூர், அதவத்தூர், சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், பொம்மணிசமுத்திரம், இனியானூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், ராமநாதநல்லூர், ஆளவந்தான்நல்லூர், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து  பகுதி வழியாகச் செல்கிறது. மேலும், திருச்சி மாநகரப் பகுதிகளில் உறையூர், பாண்டமங்கலம், அரவானூர், வரகனேரி, அரியமங்கலம், காட்டூர், பாப்பாக்குறிச்சி, கீழமுல்லைகுடி, மேலமுல்லைகுடி,  ஒட்டக்குடி, கல்கண்டார்கோட்டை, திருவெறும்பூர் மலைக்கோயில், வாளவந்தான் கோட்டைப் பகுதி வரை சுமார் 75 கி.மீ, ஓடி 120 கிளை வாய்க்கால்கள், 33 குளங்கள் மூலம் நேரடி  சுமார் 24,757 ஏக்கர் பாசன நிலங்களிலும், மறைமுகமாக சுமார் 32,740 ஏக்கர் நிலத்தில் முப்போக நெல், ஆண்டு பயிர்களான வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய பயன்பட்ட ஆறு இது.

இந்நிலையில், தற்பொழுது திருச்சி மாநகருக்குள் ஓடும் 9 கிலோ மீட்டர் இருபுறமும் உள்ள கரைகள் குப்பைகளால் மாசு பட்டுள்ளது. இந்தக் குப்பைகளை அகற்றி ஆற்றைத் தூய்மைப்படுத்த அரசும், திருச்சி மாநகராட்சியும் அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் பலனில்லை. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே சிட்டிசன் ஆப் உய்யங்கொண்டான் என்கிற பெயரில் டாக்டர். நரசிம்மராவ் தலைமையில் திருச்சி சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து உய்யங்கொண்டான் வாய்க்காலைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் இன்று வரை உய்யங்கொண்டான் ஆற்றின் கரையில் உள்ள மாசுகளைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட  மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் எய்ம் டூ ஹை தொண்டு நிறுவன உறுப்பினர்கள் என 250 மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். மேலும் வரும் வாரங்களிலும் இந்தப் பணி தொடரும் எனத் தெரிகிறது.

மனிதர்களின் தவறுகளால் பாழாய்ப்போன ஒரு ஆற்றை மாணவர்கள், பொதுமக்கள் சுத்தப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!