வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (23/04/2018)

கடைசி தொடர்பு:08:20 (23/04/2018)

`எஸ்.வி.சேகரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை' - குஷ்பு காட்டம்

தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக எஸ்.வி.சேகர் கூறினாலும் அதை ஏற்க முடியாது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

குஷ்பு

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான வகையில் ஃபேஸ்புக்கில் கருத்துகள் பதிவிட்ட நடிகரும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகருக்கு கண்டனங்கள், போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், எஸ்.வி.சேகருக்கு நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  ``உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தவறு செய்தார் என்று காங்கிரஸ் ஒருபோதும் கூறாது. விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே  தலைமை நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்காகவே  எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. உச்ச நீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை கண்டிப்பாகத் தேவை. காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தி.மு.க - காங்கிரஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. எஸ்.வி.சேகரிடம் இருந்து இந்தக் கருத்துகளை எதிர்பார்க்கவில்லை. தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக எஸ்.வி.சேகர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. பா.ஜ.க சொல்வதைத்தான் தமிழகத்தில் அ.தி.மு.க செய்துவருகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க