`ஒருபக்கம் மனவருத்தம்; மறுபக்கம் கறி விருந்து'- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அசத்திய அன்வர்ராஜா

 ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தனது கல்லூரியில் கறி விருந்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி அசத்தினார்.

தனது கல்லூரியில் கறி விருந்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி அசத்தியிருக்கிறார் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா.

கறிவிருந்துடன் நடந்த எம்.ஜி.ஆர் விழாவில் அன்வர்ராஜா.

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் இருந்து வருபவர் அன்வர்ராஜா. இவரது மகன் நாசர் அலி மீது தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னையைச் சேர்ந்த ரேடியோ ஜாக்கி ரொபினோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, நாசர் அலிக்கு காரைக்குடியில் கடந்த மாதம் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடும் குழப்பம் மற்றும் பிரச்னைகளுக்கு இடையே மகனின் திருமணம் நடந்ததால் மனவருத்தத்தில் அன்வர்ராஜா இருந்து வந்தார். இந்த மனவருத்தத்தைப் போக்கும் வகையில் தனது கல்லூரியில் கறி விருந்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி அசத்தினார்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழநாகாச்சி கிராமத்தில் அன்வர்ராஜா குடும்பத்தினர் நடத்தி வரும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அன்வர்ராஜா தலைமை தாங்கினார். அவரது மகன்கள் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி தாளாளர் லதா ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் குமார் ராஜேந்திரன், எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்று எம்.ஜி.ஆர் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
மகளிர் கல்லூரி பெயரில் விழா நடந்தப்பட்ட நிலையில் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் விழாவில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், அ.தி.மு.க-வை சேர்ந்த அன்வர்ராஜா ஆதரவாளர்கள், அ.தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் அன்வர்ராஜாவின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவில் பேசிய அன்வர்ராஜா, ``புரட்சித்தலைவர் இல்லத்துக்குச் சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி 'சாப்பிட்டீர்களா' என்பதுதான். என்.ஜி.ஆர். நடத்தும் பொதுக்குழுக் கூட்டங்களில் உணவு விருந்து தவறாமல் நடக்கும்.  எம்.ஜி.ஆர் இறந்த பின்னரும் அவரது பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலமாக நான் கல்லூரி தொடங்க ரூ.50 லட்சம் நிதி கொடுத்திருக்கிறார்கள். அந்த நன்றிக்கடனுக்காக இந்த விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறோம். இதில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, செவிக்கு சிந்தனையும், வயிற்றுக்கு உணவும் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்'' என்றார். விழா முடிவில் அன்வர்ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா நன்றி கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!